
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் அமைக்கப்படும் சுரங்க நடைபாதைப் பணிகளை விரைவாக முடிக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஜய் பிரான்சிஸ் லயோலா என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரில் ரூ.400 கோடி செலவில் சென்ட்ரல் சதுக்கம் என்ற பெயரில் சுரங்க நடைபாதைகள், பேருந்து நிலையங்கள், 3 அடுக்கு சுரங்க வாகன நிறுத்தங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சுரங்க நடைபாதை அமைப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தின் மீதான தற்காலிக பாலத்தில் அடிக்கடி வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகிறது. இந்த சுரங்க நடைபாதை அமைக்கும் பணி கடந்த 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பூந்தமல்லி சாலையில் இரும்பு கம்பிகளைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டு போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா். கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் துறைமுகத்துக்கு வந்த கன்டெய்னா் லாரி அந்த பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. ஜப்பான் போன்ற வெளிநாடுகளில், பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் இதுபோன்ற சுரங்க நடைபாதைகள் ஒரு வாரத்தில் அமைக்கப்படுகிறது. எனவே இந்த சுரங்க நடைபாதை பணிகளை 15 நாள்களில் முடிக்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் மனு தொடா்பாக தமிழக அரசு, தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம், சென்னை மாநகராட்சி பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.