வேல் கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான்: துரைமுருகன்

கடவுளையும் திமுகவினர் பகுத்தறிவுடனேயே பார்க்கிறோம். வேல் கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.
திமுக பொதுச்செயலர் துரைமுருகன்
திமுக பொதுச்செயலர் துரைமுருகன்

வேலூர்: கடவுளையும் திமுகவினர் பகுத்தறிவுடனேயே பார்க்கிறோம். வேல் கையிலெடுத்தாலே சூரசம்ஹாரம்தான் என்று திமுக பொதுச்செயலர் துரைமுருகன் கூறினார்.

திமுக சார்பில் வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தாராபடவேட்டில் மக்கள் சபை கூட்டம் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. இதில், திமுக பொதுச்செயலர் துரைமுருகன் தலைமை வகித்து மக்களிடையே உரையாற்றினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேல் கையில் எடுத்து பக்தி நாடகம் ஆடுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார். திமுகவினர் வேலை கையில் எடுத்தால் சூரசம்ஹாரம் நடந்தே தீரும். திமுகவினர் பகுத்தறிவுவாதிகள்தான் என்றாலும் பகுத்தறிவுவாதிக்கு பக்தி கூடாது என்பதில்லை. கடவுளையும் பகுத்தறிவுடன் பார்க்க வேண்டும் என்பதுதான் அர்த்தம்.

பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து ஆளுநர் ஒரு வாரத்தில் முடிவு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆளுநர் நல்ல முடிவை அறிவிப்பார் என திமுக நம்புகிறது. பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிந்தாலும் அவர்களுக்கு ஆளுநர் பதவி நீட்டிப்பு அளிக்கிறார். இதனை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் எதிர்க்கிறார். அரசும், ஆட்சியும் எதிர்க்கிறது. ஆனால் ஆளுநர் அரசை எதிர்த்து ஆட்சி நடத்துகிறார்.

வரும் 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தில் ஆளுநர் உரையாற்ற வருவார். அதற்கு முன்பே 7 பேரின் விடுதலையில் நல்ல முடிவை அறிவித்துவிட்டு வருவார் என எதிர்பார்க்கிறோம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிடம் திறப்பு விழாவுக்கு திமுகவை அழைக்கமாட்டார்கள். அப்படி அழைத்தாலும் திமுக பங்கேற்காது.

அதிமுக கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறுவது என்பது அடுத்தவீட்டு கதை. அதுபற்றி தெரியாது. திமுக கூட்டணி கட்சிகளுடன் பேசுவோம். திமுகவை நம்பி புதிய கட்சிகள் வந்தால் அவர்களையும் கூட்டணியில் இணைத்து கொள்வோம். காங்கிரஸ் தமிழகத்தில் தற்போது தனித்து பிரச்சாரம் செய்து வருகிறது. இப்போதேனும் அப்படி ஒரு செயலை செய்ய வேண்டும் என காங்கிரஸ் முடிவு எடுத்திருப்பது பாராட்டத்தக்கது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com