விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து: அதிர்ஷ்டவசமாக பயணிகள் உயிர் தப்பினர்

திருப்பதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத் தடுமாறி விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள்  உய
மங்கலம்பேட்டை பெரிய ஏரியில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து.
மங்கலம்பேட்டை பெரிய ஏரியில் இறங்கிய அரசு விரைவுப் பேருந்து.

கடலூர்: திருப்பதியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்துகொண்டிருந்த தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத் தடுமாறி விருத்தாசலம் அருகே ஏரியில் இறங்கியதில் அதிர்ஷ்டவசமாக பயணிகள்  உயிர் தப்பினர்.

ஆந்திரம் மாநிலம், திருப்தியில் இருந்து சனிக்கிழமை தமிழ்நாடு அரசு விரைவுப் பேருந்து மாலை சுமார் 7.45 மணியளவில் புறப்பட்டு, தஞ்சாவூர் நோக்கி, வேலூர், விழுப்புரம் வழியாக சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தை, தஞ்சாவூரைச் சேர்ந்த செபஸ்டின் (46)  ஓட்டிக்கொண்டு வந்தார். பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே வந்ததும், விருதுநகர் மாவட்டம், கள்ளிக்குடியைச் சேர்ந்த பழனிசாமி (37) என்பவர் சுழற்சி முறையில், அப்பேருந்தை ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், அப்பேருந்தானது, கடலூர் மாவட்டம், விடுத்தாசலம் மங்கலம்பேட்டை அருகே உள்ள புல்லூர் செல்லும் சாலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமார் 3:45 மணியளவில் வந்துக் கொண்டிருந்தது. அப்போது, பேருந்து  திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை மீறி நிலைத் தடுமாறி, புல்லூர் சாலையின் ஓரத்தில் உள்ள, நீர் நிரம்பி நிற்கும் மங்கலம்பேட்டை பெரிய ஏரியின் உள்ளே எதிர்பாராத விதமாக இறங்கியது. அப்போது, அந்தப் பேருந்தை ஓட்டி வந்த டிரைவர் பழனிசாமி மிகவும் சாமர்த்தியமாக பேருந்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.

இதனால், அப்பேருந்தில் பயணம் செய்த 52 பயணிகளும், காயங்கள் ஏதுமின்றி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்கலம்பேட்டை காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையில், துணை ஆய்வாளர்  பிரசன்னா, கோதண்டபாணி, ராஜேந்திரன் உள்ளிட்ட காவல்ரகள் பயணிகளை பாதுகாப்பாக மீட்டு, மாற்றுப் பேருந்து மூலம் அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com