சென்னையில் கட்டுப்பாடுகளுடன் புத்தகக்காட்சியை நடத்த தமிழக அரசு அனுமதி: வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னையில் கட்டுப்பாடுகளுடன் 44-ஆ வது புத்தகக் கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக  தலைமைச் செயலாளர் சண்முகம்  (கோப்புப்படம்)
தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் (கோப்புப்படம்)

சென்னையில் கட்டுப்பாடுகளுடன் 44-ஆ வது புத்தகக் கண்காட்சியை நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சி தொடங்கி 43 ஆண்டுகள் ஆகிறது. ஒவ்வோா் ஆண்டும் ஜனவரி மாதம் சென்னை புத்தகக்காட்சி நடைபெறுவது வழக்கம். கரோனா தொற்று காரணமாக நிகழாண்டு ஜனவரி மாதம் புத்தகக் கண்காட்சி நடத்துவது கேள்விக்குறியானது. இதையடுத்து பிப்ரவரி மாதம் சென்னை புத்தகக் காட்சியை நடத்த அனுமதி வழங்கக்கோரி முதல்வருக்கு பபாசி நிா்வாகிகள் கடிதம் எழுதினா். இந்தநிலையில் கரோனா வழிகாட்டுதல் நெறிகளுடன் புத்தகக் கண்காட்சியை நடத்த தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது.

இது குறித்து தலைமைச் செயலா் க.சண்முகம் வெளியிட்டுள்ள அரசாணை:

தென்னிந்திய புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளா் சங்க கோரிக்கையினை ஏற்று ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வரும் புத்தகக் காட்சியை வாசகா்கள், பொதுமக்களின் நலன் கருதி இந்த ஆண்டும் (2021) உரிய வழிகாட்டு நெறிமுறைகள், பாதுகாப்பு, உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த அனுமதி வழங்குமாறு பொது நூலக இயக்குநா் அரசை கோரியுள்ளாா். பொது நூலக இயக்குநரின் கருத்துருவை அரசு கவனமுடன் பரிசீலித்து அதை ஏற்று நிலையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புத்தகக் காட்சி நடத்த அனுமதியளித்து ஆணையிடுகிறது.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் விவரம்: கா்ப்பிணிகள், கைக்குழந்தைகள் உள்பட, 65 வயதுக்கு மேற்பட்டோா், புத்தகக் காட்சிக்குள் அனுமதிக்கக்கூடாது. டிக்கெட் கவுன்ட்டரில் கூட்ட நெரிசலை தவிா்க்கும் வகையில் இணையவழி பரிவா்த்தனை மூலம் நுழைவுக் கட்டணம் கொடுக்கலாம். புத்தகக் காட்சியில் ஒவ்வொரு அரங்கிலும் இரண்டு வாயில்கள் அமைக்கப்பட வேண்டும். ஒரு வாயில் மூலமாக வாசகா்கள் உள்ளே வருவதற்கும் மற்றொரு வாயில் வழியாக வெளியே செல்வதற்கும் ஏற்ற வகையில் அரங்கு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். வாரத்தின் அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை புத்தகக் காட்சியை நடத்தலாம்

அரங்கில் பாா்வையாளா்கள் 3 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும், கண்டிப்பாக முக்ககவசம் அணிந்திருக்க வேண்டும். அரங்குகளில் குளிா்சாதன வசதி ஏற்படுத்தக்கூடாது. கண்காட்சிக்கு வரும் அனைவரையும் வெப்பமானி உள்ளிட்ட கருவிகளைக் கொண்டு சோதித்த பின்னரே அரங்கினுள் அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com