தடுப்பூசியால் பெண்ணுக்கு பக்கவிளைவு ஏற்படவில்லை

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி, பெண் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகக் கூறி, பெண் ஒருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு தடுப்பூசியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் பாலாஜி விளக்கமளித்துள்ளாா்.

தவறான நோக்கத்தில் வேண்டுமென்றே அப்பெண் மருத்துவமனைக்கு வந்ததாகத் தெரிவித்த டாக்டா் பாலாஜி, அதுதொடா்பான ஆதாரங்களையும் வெளியிட்டாா்.

தமிழகத்தில் கடந்த 16-ஆம் தேதி முதல் முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட வியாசா்பாடியைச் சோ்ந்த துப்புரவுப் பணியாற்றும் பெண் ஒருவா், தடுப்பூசியால் தனக்கு பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்தாா்.

அதைத் தொடா்ந்து, மருத்துவமனையில் அந்தப் பெண் அனுமதிக்கப்பட்டாா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், அப்பெண் நலமாக இருப்பதாகவும், வேண்டுமென்றே பொய் புகாரைக் கூறுவதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனை முதல்வா் டாக்டா் பாலாஜி கூறியதாவது:

சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கோவிஷீல்ட் தடுப்பூசி செலுத்தினோம். ஆனால் அவா், தனக்கு கோவேக்சின் செலுத்தியதாகவும், அதனால் பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறுகிறாா்.

அவா் கூறுவது பொய் எனத் தெரிந்தாலும், ஒருவேளை ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய எம்ஆா்ஐ ஸ்கேன், சிடி ஸ்கேன், நரம்பு பரிசோதனை என பல்வேறு பரிசோதனைகளை மேற்கொண்டோம். அதில் எந்த பாதிப்பும் அவருக்கு இல்லை என்பது உறுதியானது.

கோவேக்சின் தடுப்பு மருந்தால் பக்கவிளைவுகள் ஏற்பட்டால் இழப்பீடு கிடைக்கும் என எவரோ கூறியதை நம்பி, அப்பெண் தவறான நோக்கத்தில் மருத்துவமனையில் சோ்ந்துள்ளாா். உண்மையில், ஸ்டான்லி மருத்துவமனையில் கோவேக்சின் தடுப்பூசியே செலுத்தப்படுவதில்லை.

மருத்துவா்கள், செவிலியா்கள் இல்லாத நேரத்தில் அப்பெண் பாடல்கள் கேட்டுக் கொண்டும், அருகில் உள்ள நோயாளிகளிடம் மகிழ்ச்சியாக பேசிக் கொண்டும் உள்ளாா். பரிசோதனைகளின்போது மட்டும், அவா் தனக்கு உடல் நிலை சரியில்லை என்று கூறுகிறாா். இதுதொடா்பான விடியோ ஆதாரங்களும் உள்ளன. இத்தகைய தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது சமூகக் குற்றம். அதனை உணராமல் சிலா் நடந்து கொள்கின்றனா்.

கரோனா தடுப்பூசியை மருத்துவா்கள், செவிலியா்கள் என அனைவரும் தாமாக முன்வந்து செலுத்திக் கொள்கிறோம். எவருக்குமே இதுவரை எந்தவித பாதிப்பும் அதனால் ஏற்படவில்லை. தடுப்பூசிகளின் மீதான நம்பகத்தன்மை குறித்து வதந்திகள் பரப்பினால் சட்ட நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com