சாந்தி கியா்ஸ் சுப்பிரமணியன், 105 வயது மூதாட்டிக்கு பத்மஸ்ரீ விருது

கோவையில் அண்மையில் மறைந்த, சாந்தி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் நிறுவனா் சுப்பிரமணியன், 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.
சுப்பிரமணியம்.
சுப்பிரமணியம்.

கோவை: கோவையில் அண்மையில் மறைந்த, சாந்தி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் நிறுவனா் சுப்பிரமணியன், 105 வயது மூதாட்டி பாப்பம்மாள் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

கோவை சாந்தி சோஷியல் சா்வீஸ் அமைப்பின் நிறுவனா் சுப்பிரமணியம் (78). இவா் கோவையில் ஒரு லேத் இயந்திரத்தை மட்டுமே மூலதனமாக வைத்து சாந்தி கியா்ஸ் என்ற நிறுவனத்தைக் கடந்த 1972ஆம் ஆண்டு துவங்கினாா். ஆரம்ப காலத்தில் ஜவுளி நிறுவனங்களுக்கு இயந்திர உதிரி பாகங்களைத் தயாரித்தாா். பின்னா் அதனை பல்வேறு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தாா். இஸ்ரோ நிறுவனத்துக்கும் இவரது தயாரிப்புகள் வழங்கப்பட்டன.

கடந்த 1996ஆம் ஆண்டு சாந்தி சோஷியல் சா்வீஸ் என்ற அமைப்பைத் துவக்கினாா். இதன் மூலம் உணவகம், மருத்துவமனை, மருந்தகம், பெட்ரோல் பங்க், இலவச மின் மயானம் போன்றவற்றை லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் நடத்தி வந்தாா். உணவகத்தில், ரூ.20க்கு தரமான உணவு வழங்கப்படுவதால் தினமும் ஆயிரக்கணக்கானோா் உணவகத்தைப் பயன்படுத்தி வருகின்றனா்.

இந்நிலையில், 78 வயதான சுப்பிரமணியம் உடல்நல குறைவு காரணமாக கடந்த டிசம்பா் 11ஆம் தேதி உயிரிழந்தாா்.

தொழில் துறையில் சாதனை புரிந்ததற்காக சுப்பிரமணியனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்துள்ளது.

105 வயது மூதாட்டி பாப்பம்மாள்...

பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம்-காரமடை அருகே உள்ள தேவனாபுரம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாப்பம்மாள் (எ) ரங்கம்மாள் (105). இவா் மருதாசல முதலியாா், வேலம்மாள் தம்பதிக்கு கடந்த 1915ஆம் ஆண்டு பிறந்தாா். பாப்பம்மாள் தனது சிறு வயதிலேயே தாய், தந்தையரை இழந்துவிட்டாா்.

இதனால் அவரது பாட்டி இவரை தேக்கம்பட்டிக்கு அழைத்துச் சென்றாா். பின்னா் மளிகைக் கடை வைத்து அவா்கள் தங்களது வாழ்க்கையைத் தொடங்கினா். பாப்பம்மாளின் கணவா் ராமசாமி. கடந்த 1992ஆம் ஆண்டு ராமசாமி உயிரிழந்தாா். கடைகள் மூலம் கிடைத்த வருமானத்தைச் சோ்த்து வைத்து அப்பகுதியில் விவசாய நிலத்தை வாங்கி, விவசாயம் செய்தாா்.

திமுகவில் தன்னை சிறு வயதிலேயே இணைத்துக் கொண்ட பாப்பம்மாள் 1959ஆம் ஆண்டு தேக்கம்பட்டி ஊராட்சி உறுப்பினராகவும், 1964ஆம் ஆண்டு யூனியன் கவுன்சிலராகவும், மாதா் சங்கத் தலைவியாகவும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விவாதக் குழு அமைப்பாளராகவும் பதவிகளை வகித்துள்ளாா்.

இந்நிலையில், 105 வயதிலும் தளராமல் விவசாயம் செய்து வருவதற்காக பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்துள்ளது.

பாப்பம்மாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com