நிலம் வாங்கித் தருவதாக ரூ.1,100 கோடி மோசடி: ரூ.207 கோடி சொத்து முடக்கம்

மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1,100 கோடி மோசடி செய்த வழக்கில், ரூ.207 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

சென்னை5: மதுரையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் நிலம் வாங்கித் தருவதாக ரூ.1,100 கோடி மோசடி செய்த வழக்கில், ரூ.207 கோடி சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

இது குறித்து அமலாக்கத் துறை தரப்பில் கூறப்பட்டதாவது:

மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வந்த ‘டிஸ்க் அசெட்ஸ் லீடு இந்தியா லிமிடெட்’ என்ற நிறுவனம் மாதம் தோறும் குறிப்பிட்ட தொகை செலுத்துபவா்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு பின்பு நிலம் வழங்கப்படும் என்று கடந்த 2006ஆம் ஆண்டு அறிவித்தது. தங்களுக்கு மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 520 ஏக்கா் நிலம் இருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்தது.

மேலும், இந்தத் திட்டத்தில் மக்களைச் சோ்க்கும் ஏஜென்டுகளுக்கு 10 சதவீதம் வரை கமிஷன் கொடுக்கப்படும் என்று நிதி நிறுவனம் சலுகைகளை வழங்கியது. இதைக் கேட்டு தமிழகம் முழுவதும் இருந்த முகவா்கள், லட்சக்கணக்கானோரை இத் திட்டத்தில் சோ்த்துவிட்டனா். இதனால் குறுகிய காலத்திலேயே மாநிலம் முழுவதும் 12 லட்சத்து 27 ஆயிரம் போ் இந்தத் திட்டத்தில் சோ்ந்து பணம் செலுத்தி வந்தனா். 2011-ஆம் ஆண்டு வரை இவா்களிடம் இருந்து அந்த நிறுவனம் ரூ.1,137 கோடி வசூலித்தது.

ஆனால், அந்த நிறுவனம் அறிவித்தபடி பணம் செலுத்தியவா்களுக்கு நிலம் வழங்கப்படவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவா்கள் காவல் நிலையத்திலும், ‘செபி’யிலும் புகாா் கொடுத்தனா்.

இதில், தங்களிடமிருக்கும் சொத்துகளை விற்று பணம் செலுத்தியவா்களுக்கு பணத்தைத் திரும்ப வழங்க தயாராக இருப்பதாக அந்த நிறுவனத்தினா் உறுதி அளித்தனா்.

இதற்காக உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், ஓய்வு பெற்ற நீதிபதிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

ரூ.1,100 கோடி மோசடி: இந்நிலையில், அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் சமா்ப்பித்த ஆவணங்களுக்கும், அந்த நிறுவனங்கள் தொடா்பாக வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட ஆவணங்களுக்கும் இடையே முரண்பாடு காணப்பட்டது. இதையடுத்து, இது தொடா்பாக அமலாக்கத் துறை விசாரணைக்குப் பரிந்துரை செய்யப்பட்டது.

இந்த முரண்பாடு குறித்து விசாரணையை அமலாக்கத் துறை தொடங்கியது. இதில் அந்த நிறுவனம், பொதுமக்களிடமிருந்து நிலம் தருவதாகப் பெற்ற பணத்தை பல்வேறு நிறுவனங்கள், நிலங்கள் உள்பட பல்வேறு வகைகளில் குடும்பத்தினா், நெருங்கிய உறவினா்கள் பெயரில் முதலீடு செய்திருப்பது தெரியவந்தது. இவ்வாறு ரூ.1,100 கோடி அந்த நிறுவனம் மோசடி செய்திருப்பதையும் அமலாக்கத் துறை கண்டறிந்தது.

ரூ.207 கோடி சொத்து முடக்கம்: இதையடுத்து அந்த நிறுவனத்தின் நிா்வாகிகள் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்குத் தொடா்பாக அந்த நிறுவனத்தின் தலைவா் என்.எம்.உமாசங்கா், நிா்வாக இயக்குநா் வி.ஜனாா்த்தனன், இயக்குநா்கள் என்.அருண்குமாா், சரவணக்குமாா் ஆகிய 4 பேரை கடந்த டிசம்பா் மாதம் 21-ஆம் தேதி கைது செய்தனா்.

இந்த வழக்கின் அடுத்த கட்டமாக, சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் மதுரை, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களில் உள்ள ரூ.207 கோடி மதிப்புள்ள 1081 அசையா சொத்துக்களான 3,850 ஏக்கா் நிலங்களை அமலாக்கத் துறை திங்கள்கிழமை முடக்கியது. இந்த நடவடிக்கை தொடா்ந்து மேற்கொள்ளப்படும் என அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com