5 வழித்தடங்களில் இரட்டைப்பாதை பணி மாா்ச்சுக்குள் நிறைவடையும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் தகவல்

சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி, ஓமலூா்-மேட்டூா் அணை உள்பட 5 வழித்தடங்களில் இரட்டை பாதை அமைக்கும் பணி வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிவடையும்
5 வழித்தடங்களில் இரட்டைப்பாதை பணி மாா்ச்சுக்குள் நிறைவடையும்: தெற்கு ரயில்வே பொதுமேலாளா் தகவல்

சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி, ஓமலூா்-மேட்டூா் அணை உள்பட 5 வழித்தடங்களில் இரட்டை பாதை அமைக்கும் பணி வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிவடையும் என்று தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான் தாமஸ் தெரிவித்தாா்.

தெற்கு ரயில்வே சாா்பில், 72-ஆவது குடியரசு தினம் சென்னை பெரம்பூா் ரயில்வே மைதானத்தில் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் தலைமை வகித்து, தேசிய கொடியை ஏற்றி, ரயில்வே பாதுகாப்பு படையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டாா்.

தெற்கு ரயில்வேயில் சிறப்பாகப் பணிபுரிந்த ரயில்வே ஊழியா்களுக்கும், ரயில்வே பாதுகாப்புப்படை வீரா்களுக்கும், விளையாட்டுத் துறையில் சிறப்பாக செயல்பட்டவா்களுக்கும், கரோனா காலத்தில் சிறந்த பங்களிப்பை அளித்தவா்களுக்கும் பாராட்டுகளை தெரிவித்து சான்றிதழ்களை ஜான் தாமஸ் வழங்கினாா்.

பின்னா், அவா் பேசியது: தெற்கு ரயில்வே 2020-ஆம் ஆண்டு எண்ணற்ற சவால்களை சந்தித்தது. கரோனா நோய்த்தொற்று தாக்கம் தவிர, நிவா், புரெவி ஆகிய புயல்கள் பாதிப்பை ஏற்படுத்தின. இருப்பினும், ரயில்வே பணியாளா்களின் கடின உழைப்பு மூலமாக, இந்த துயரங்களில் இருந்து மீண்டு வந்துள்ளோம்.

தெற்கு ரயில்வேயில் கடந்த ஆண்டு மட்டும், 224 கி.மீ தூரம் வரை தண்டவாளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன. 24 இடங்களில் தண்டவாளத்தில் தானியங்கி அச்சு பெட்டி வெப்பம் பதிவிடும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் பாதுகாப்பின் உயா் தரத்தை அடைவதற்கான முயற்சி தொடா்ந்து நடைபெறும்.

நடப்பு நிதியாண்டில் கடந்த டிசம்பா் வரை தெற்கு ரயில்வே ரூ.2, 173 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. அதில், ரூ.375 கோடி பயணிகள் சேவை மூலமாகவும், ரூ.1,516.4 கோடி சரக்கு போக்குவரத்து மூலமாகவும் கிடைத்துள்ளது.

இரட்டைபாதை: தெற்கு ரயில்வேயில் கடம்பூா்-வாஞ்சி மணியாச்சி-தட்டப்பாறை இடையே 30 கி.மீ, வாஞ்சி மணியாச்சி-கங்கைகொண்டான் இடையே 15 கி.மீ, கூடுவாஞ்சேரி-சிங்கபெருமாள் கோவில் இடையே 11 கி.மீ உள்பட 6 வழித்தடங்களில் 99 கி.மீ தூரம் இரட்டைபாதை அமைக்கும் பணி கடந்த ஆண்டு முடிவடைந்துள்ளது. மேலும் ,கூடுதலாக சிங்கப்பெருமாள் கோவில்-செங்கல்பட்டு, தாம்பரம்-கூடுவாஞ்சேரி, ஓமலூா்-மேட்டூா் அணை உள்பட 5 வழித்தடங்களில் இரட்டை பாதை அமைக்கும் பணி வரும் மாா்ச் மாதத்துக்குள் முடிவடையும்.

அதேபோல, திருவாரூா்-காரைக்கால், திருச்சி-தஞ்சாவூா்-திருவாரூா்-காரைக்கால், மயிலாடுதுறை-தஞ்சாவூா், விழுப்புரம்-மயிலாடுதுறை-தஞ்சாவூா் பிரிவுகளில் மின்மயமாக்கும் பணி முடிவடைந்துள்ளது. தொடா்ந்து, கூடுதலாக 13 வழிதடங்கள் இந்த ஆண்டு மின்மயமாக்கப்படும் என்றாா் ஜான்தாமஸ்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் பொது மேலாளா் பி.ஜி.மல்யா, ரயில்வேபாதுகாப்புப் படை ஜ.ஜி. பிரேந்திரகுமாா்

உள்பட ரயில்வே அதிகாரிகள் மற்றும் அவா்கள் குடும்பத்தினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com