அதிக மகசூல் தரக்கூடிய, மழையில் சாயாத புதிய நெல்ரகச் சாகுபடிப் பயிற்சி

அதிக மகசூல் தரக்கூடிய மேலும் மழையில் சாயாத, விவசாயிகளின் தேவைக்கேற்ற, நல்ல பயன்தரக்கூடிய, புதிய நெல் ரகமான ஏடிடீ 52 நெல் சாகுபடிப் பயிற்சி புதன்கிழமை, போழக்குடியில் நடைபெற்றது. 
போழக்குடி கிராம வயலில் புதிய நெல் ரக மகசூலை நேரடிஆய்வு செய்த போது எடுத்த படம்.
போழக்குடி கிராம வயலில் புதிய நெல் ரக மகசூலை நேரடிஆய்வு செய்த போது எடுத்த படம்.


நன்னிலம்: அதிக மகசூல் தரக்கூடிய மேலும் மழையில் சாயாத, விவசாயிகளின் தேவைக்கேற்ற, நல்ல பயன்தரக்கூடிய, புதிய நெல் ரகமான ஏடிடீ 52 நெல் சாகுபடிப் பயிற்சி புதன்கிழமை, போழக்குடியில் நடைபெற்றது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் சார்பாக, திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் போழக்குடிக் கிராமத்தில், நிலையத்தின் இயக்குனர் வெ. அம்பேத்கார் தலைமையில், நிலையப் பேராசிரியர்கள், நெல் மற்றும் தரிசுப்பயறு வகைப் பயிர்கள் பயிரிடுவது பற்றியப் பயிற்சியினைப் புதன்கிழமைக் காலை முதல் மாலை வரை விவசாயிகளுக்கு அளித்தனர்.

பயிற்சியில், பயிர் மரபியல் உதவிப் பேராசிரியர் முனைவர் இரா. அருள்மொழி, முனைவர் இரா.புஷ்பா, முனைவர் த.சசிகுமார், முனைவர் அர. மணிமாறன், முனைவர்  த .சிவசங்கரிதேவி,  முனைவர்  செ.உமாமகேஸ்வரி,  முனைவர் அ.அனுராதா,  முனைவர்  வை.இராதாகிருஷ்ணன்,  முனைவர் அ.இராமநாதன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட, பயிர் நோயியல்,  பயிர் பூச்சியியல், மண்ணியல், உழவியல், நுண்ணுயிரியல், பயிர் மரபியல் போன்ற பல்துறைப் பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளித்தனர்.

போழக்குடி கிராமத்தில், ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் இயக்குனர் விவசாயிகளுக்குப் பயிற்சி வகுப்பு நடத்திய போது எடுத்த படம்.

மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, புதிய நெல் ரகமான சான்றழிக்கப்பட்ட ஏடிடீ 52 , நடுத்தர உயரம், அதிக தூர்கட்டும் திறன் மற்றும் சாயாதத் தன்மைக் கொண்ட, மழையில் சாய்ந்து விவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தாத, பூச்சிகள் தாக்கத்தைத் தாங்கும் திறன் கொண்ட 150 நாள்கள் வயதுடைய, சம்பாவுக்கு ஏற்ற புதிய நெல் ரகம்,  ஹெக்டருக்கு 50 மூட்டைகள் மகசூல் அளித்திருப்பதைப் போழக்குடி முன்னோடி விவசாயி மூர்த்தியின் வயலில், புதிய நெல் ரகச் சோதனை அடிப்படையில் சாகுபடிச் செய்யப்பட்டதை அறுவடைச் செய்து, கணக்கிட்டு, எவ்வளவு மகசூல் கிடைக்கிறது என்பதை நேரடியாக விவசாயிகளுக்கு செயல்விளக்கம் காண்பித்தனர்.  

பின்னர் நடைபெற்றப் பயிற்சியில், நெல் ரகத்தின் முக்கிய அம்சங்கள், புதிய உளுந்து ரகத்தின் முக்கிய அம்சங்கள், நெல் மற்றும் பயறு வகைப் பயிர்களில் உயிர் உரங்களின் பயன்பாடு, புதிய உற்பத்தி தொழில்நுட்பங்கள், ஊட்டச்சத்து மேலாண்மை, ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைப் போன்றவைப் பற்றி விளக்கம் அளித்தனர். 

பின்னர் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட படங்களைப் பற்றிய செயல் விளக்கமும் அளிக்கப்பட்டது. பயிற்சியில் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகளும், குடவாசல்  வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்  கே.ஜெயபிரகாஷ், நன்னிலம் மற்றும் குடவாசல் வேளாண்மைத் துறை அலுவலர்களும்,  ஆடுதுறை நெல் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர்கள் மற்றும் நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய விஞ்ஞானிகளும்,அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com