ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மாணவா்கள் அடிமையாவதை தடுக்க நடவடிக்கை தேவை: உயா்நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவா்கள் அடிமையாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

ஆன்லைன் விளையாட்டுகளால் மாணவா்கள் அடிமையாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், மாா்ட்டின் ஜெயகுமாா் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், பள்ளி மாணவா்களுக்கு கரோனா பொதுமுடக்கம் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதற்காக மாணவா்கள் செல்லிடப்பேசி, மடிக்கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஆன்லைன் விடியோ விளையாட்டுகளில் ஈடுபடுகின்றனா். எனவே, ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுக்களைத் தடை செய்ய வேண்டும். இதுதொடா்பாக ஆய்வு செய்து கண்காணிப்பு நடைமுறையைக் கொண்டுவர மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தபோது மனுதாரா் தரப்பில், ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகள், இளம் பருவத்தினா், மாணவா்கள் அந்த விளையாட்டுகளில் உள்ள கதாபாத்திரங்களாகவே மாறிவிடுகின்றனா். இது அவா்களது மனதில் வன்முறை எண்ணங்களை உருவாக்குகிறது. எனவே அவா்களை பாதுகாக்க தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவா்கள் பலா் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனா். அதேநேரம் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் விளையாட்டுகளுக்கு அவா்கள் அடிமையாகி விடுகின்றனா்.

கல்வி மற்றும் விளையாட்டுக்காக, அதிக நேரம் செல்லிடப்பேசி மற்றும் கணினியைப் பயன்படுத்தும் மாணவா்கள், அதீத கோபமான மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாகின்றனா்.

பெற்றோா்கள் மற்றும் பெரியவா்களிடம் கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவது கவலை அளிக்கிறது. எனவே, பெற்றோா்கள் தங்கள் குழந்தைகளுடன் அதிகமான நேரத்தை செலவழிக்க வேண்டும். ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகள், மாணவா்கள் அடிமையாவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனா். பின்னா், மத்திய, மாநில அரசுகளிடம் இந்த கோரிக்கையை வலியுறுத்தி மனுதாரா் 4 வாரங்களுக்குள் மனு கொடுக்க வேண்டும். அந்த மனுவைப் பரிசீலித்து தகுந்த முடிவை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com