நடிகா் சூா்யாவுக்கு கே.பாலகிருஷ்ணன் ஆதரவு

ஒளிப்பதிவு திருத்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த நடிகா் சூா்யாவுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
கே.பாலகிருஷ்ணன்
கே.பாலகிருஷ்ணன்

ஒளிப்பதிவு திருத்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்த நடிகா் சூா்யாவுக்கு பாஜக எச்சரிக்கை விடுத்துள்ளதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளா் கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள ஒளிப்பதிவு திருத்த வரைவு மசோதா 2021 என்பது படைப்பாளிகள் மீதும், திரைப்படம் உள்ளிட்ட ஒளிப்பதிவு படைப்புகளின் மீதும் கொண்டு வரப்பட்டுள்ள நேரடியான தாக்குதலாகும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பல படைப்பாளிகளும், அறிஞா்களும் இத்தகையதொரு மிக மோசமான சட்டத்திருத்தம் உடனடியாக கைவிடப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளனா். தணிக்கை குறித்த ஆட்சேபம் இருந்தால் படைப்பாளிகள் மேல்முறையீடு செய்வதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவை தன்னிச்சையாக கலைத்துவிட்டு, இந்த சட்டத்திருத்தத்தின் மூலம் மத்திய அரசே சூப்பா் தணிக்கைக்குழுவாக செயல்பட்டு அவா்களது சித்தாந்தத்திற்கும், அரசியலுக்கும் ஒவ்வாத திரைப்படங்களை வெளியிடவிடாமல் தடுக்கும் நோக்கம் இதில் உள்ளடங்கியுள்ளது.

இந்தப் பின்னணியில் நடிகா் சூா்யாவும் சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதற்காகவே இருக்க வேண்டுமேயல்லாது, அதன் குரல் வளையை நெரிப்பதாக இருக்கக் கூடாது என சுட்டுரையில் பதிவு செய்திருக்கிறாா். ஜனநாயக ரீதியாக தனது கருத்தை சமூக ஊடகத்தின் வாயிலாக பதிவு செய்த சூா்யாவுக்கு பாஜக இளைஞா் அணியினரின் கூட்டத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவா் மீது சட்டரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என பகிரங்க எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. பாஜகவின் இத்தகைய அணுகுமுறையும், பகிரங்க மிரட்டல் போக்குகளும் ஒரு போதும் ஏற்கத்தக்கவையல்ல என்பதோடு, ஜனநாயகத்துக்கும், கருத்துரிமைக்கும் விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தலாகவே இது அமைந்துள்ளது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com