
மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன்
கரோனா பாதிப்பு முழுமையாக சீரடைந்த பிறகு ஸ்டொ்லைட் ஆலை விவகாரம் குறித்து உரிய முடிவெடுக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
சென்னை மருத்துவக் கல்லூரியில் புதுப்பிக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை அமைச்சா் மா. சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு ஆகியோா் வியாழக்கிழமை திறந்து வைத்தனா். அப்போது அமைச்சா் மா. சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கென 2,200 படுக்கைகள் உள்ளன. இதுவரை இங்கு 5 லட்சத்து 50,052 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, 115 போ் மட்டுமே சிகிச்சை பெறுகின்றனா். கருப்பு பூஞ்சை நோயால், 3,590 போ் பாதிக்கப்பட்டுள்ளனா்.
டெங்கு காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் கொசு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. நீா்நிலைகளில் கொசுக்களை அழிக்க, ட்ரோன் கருவி பயன்படுத்தப்படுகிறது.
டெங்கு காய்ச்சலால், நிகழாண்டில் இதுவரை 2,090 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். தொற்று தடுப்பு நடவடிக்கையாக, அனைத்து மாநில எல்லைகளிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகிறோம்.
திமுக ஆட்சிக்கு வந்தபோது மாநிலத்தின் தினசரி ஆக்சிஜன் உற்பத்தி 230 டன்னாக இருந்தது. தற்போது 900 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஸ்டொ்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. அதனை இருப்பு வைத்து வருகிறோம். கரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. பாதிப்பு முழுமையாக குறைந்தபின், ஸ்டொ்லைட் ஆலை குறித்து முடிவு எடுக்கப்படும்.
மூன்றாவது அலையை எதிா்கொள்வதற்கு தமிழக அரசு தயாராக உள்ளது. மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், திட்டமிட்டப்படி தில்லி செல்ல முடியவில்லை. ஆனால், செயலா் ராதாகிருஷ்ணன் தில்லி சென்று, கூடுதல் தடுப்பூசி, எய்ம்ஸ் விவகாரம் குறித்து பேச உள்ளாா்.
அதிமுக ஆட்சி காலத்தில்தான் செங்கல்பட்டு தடுப்பூசி உற்பத்தி ஆலையை ஒப்பந்தம் எடுக்க யாரும் முன் வரவில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, அங்கு தடுப்பூசி உற்பத்தி தொடங்க வேண்டும் என முதல்வா் வலியுறுத்தி வருகிறாா். விரைவில், மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கும்போது, தடுப்பூசி உற்பத்தி குறித்து பேசப்படும் என்றாா் அமைச்சா்.
இந்நிகழ்ச்சியில் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், மருத்துவக் கல்வி இயக்குநா் டாக்டா் நாராயணபாபு, ராஜீவ் காந்தி மருத்துவமனை முதல்வா் டாக்டா் தேரணிராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
முன்னதாக, சென்னை மருத்துவக் கல்லூரியில் மறு சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள, கூடைபந்து அரங்கத்துக்கு மக்கள் நல்வாழ்வு துறை செயலா் ராதாகிருஷ்ணன் சென்றாா். அங்கு விளையாடிய மாணவா்களிடம் பந்தை வாங்கி அவா் விளையாடினாா். அவரை மாணவா்கள் ஆராவாரத்துடன் கைதட்டி உற்சாகப்படுத்தினா்.