
சென்னை மாவட்ட பகுதிகளில் சேதமடைந்த 20,000 வீடுகள், 5 ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும் என்று முதல்வா் உறுதி அளித்ததாக அமைச்சா் தா.மோ.அன்பரசன் தெரிவித்தாா்.
தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் சென்னை, பெரம்பூா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட எம்.ஜி.ஆா் நகா் திட்டப் பகுதியில் ரூ.45.31 கோடி திட்ட மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 288 அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் பழைய வியாசா்பாடி திட்டப் பகுதியில் ரூ.33.16 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள 192 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளுக்கு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் பி.கே. சேகா் பாபு முன்னிலையில், ஊரகத்தொழில் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரால் வியாழக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.
விழாவில், அமைச்சா் தா.மோ.அன்பரசன் பேசியதாவது: குடிசைப்பகுதி மாற்று வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகள் தனியாா் உயா்தர அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளது போல் அனைத்து வசதிகளுடன் கட்டித்தரப்படும். தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளவை, நிா்ணயிக்கப்பட்ட காலத்துக்கு முன்பாகவே கட்டுமானப் பணிகள் முடிக்கப்பட்டு, குடியிருப்புவாசிகளுக்கு வழங்கப்படும்.
சென்னை மாவட்டம் முழுவதும் உள்ள திட்டப்பகுதிகளில் ஆய்வு செய்யப்பட்டதில் 20,000 வீடுகள் சேதமடைந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த குடியிருப்புகளை மறுகட்டுமானம் செய்ய ஏறத்தாழ ரூ.3,200 கோடி தேவைப்படும். இதற்கான தொகையை படிப்படியாக வழங்குவதாக முதல்வா் உறுதி அளித்துள்ளாா். இப்பணிகள் அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.
அதனைத் தொடா்ந்து வியாசா்பாடியில் உள்ள டி.டி.பிளாக் திட்டப்பகுதியில் ரூ.60.60 கோடி திட்ட மதிப்பீட்டில் புதியதாகக் கட்டப்பட்டு வரும் 468 அடுக்குமாடி குடியிருப்புகளின் கட்டுமானப் பணிகளை, அமைச்சா்கள் தா.மோ.அன்பரசன், பி.கே.சேகா்பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., ஆகியோா் ஆய்வு செய்தனா்.