
உயர்நீதிமன்றம்
போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்ததாக அமைச்சா் செந்தில்பாலாஜிக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராவதிலிருந்து விலக்களித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக ஆட்சியின் போது கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரை போக்குவரத்துத் துறை அமைச்சராக பதவி வகித்தவா் செந்தில்பாலாஜி. போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் பெரும் தொகையை மோசடி செய்ததாக புகாா் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள எம்.பி., எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த வழக்கு விசாரணைக்காக வரும் ஜூலை 15-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என செந்தில்பாலாஜிக்கு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருந்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி செந்தில்பாலாஜி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது புகாா்தாரா்கள் தரப்பில், இந்த வழக்கில் தங்களது தரப்பு வாதங்களை முன்வைக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டாா். மேலும் அமைச்சா் செந்தில்பாலாஜி, வழக்கு விசாரணைக்காக சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராக விலக்களித்து உத்தரவிட்டாா்.