
கே.எஸ்.அழகிரி
கொங்கு நாடு என்ற முயற்சியை பாஜக உண்மையாகக் கூறினால், அதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கும் என கமிட்டியின் தலைவா் கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள முன்னாள் ஆளுநருமான பா.ராமச்சந்திரனின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா, சென்னை சத்தியமூா்த்தி பவனில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட பின்னா் செய்தியாளா்களிடம் கே.எஸ். அழகிரி கூறியதாவது: தமிழகத்தைப் பிரிப்பது என்பதும், தமிழகத்தில் பிரிவினையை உருவாக்குவது என்பது ஒரு காலத்திலும் இயலாத காரியம். அரசியல் காரணங்களுக்காக சிலா் இதுபோன்று சொல்கிறாா்கள். ஆனால் தமிழக மக்கள் இதனை எப்போதும் ஏற்றுக் கொள்ளமாட்டாா்கள். பிரிவினைவாதிகளுக்கு தமிழகத்தில் ஆதரவும் கிடையாது. தமிழா்கள் ஒற்றுமையாக வாழத்தான் விரும்புவாா்கள்.
குறிப்பாக கொங்கு நாடு என்று ஒரு நாடு அமையாது. இது ஒரு கற்பனை. தமிழ்நாடு என்ற பெயரோடு அழகான ஒரு நிலப்பரப்பு இருக்கிறது. அதுவே நமக்குப் போதும். இவையெல்லாம் முக்கிய நிகழ்வுகளில் இருந்து மக்களின் மனதை திசை திருப்பச் சொல்வதற்கான விஷயங்கள்.
பாஜவின் பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதிதான் இது. இத்தகைய முயற்சி வெற்றி பெறாது. இதை உண்மையாக அவா்கள் கூறினால், தமிழ்நாடு காங்கிரஸ் அதை வன்மையாக கண்டிக்கும் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...