அதிமுக-பாஜக: யாரால் யாருக்கு லாபம்?

அதிமுக-பாஜக கூட்டணி இடையிலான திடீர் நட்பு முரணுக்கு அதிமுக தலைமை முற்றுப்புள்ளி வைத்தாலும், அதிமுகவால் பாஜகவுக்கு லாபமா?
அதிமுக-பாஜக: யாரால் யாருக்கு லாபம்?
அதிமுக-பாஜக: யாரால் யாருக்கு லாபம்?

அதிமுக-பாஜக கூட்டணி இடையிலான திடீர் நட்பு முரணுக்கு அதிமுக தலைமை முற்றுப்புள்ளி வைத்தாலும், அதிமுகவால் பாஜகவுக்கு லாபமா? அல்லது பாஜகவால் அதிமுகவுக்கு லாபமா? அல்லது இருவருக்குமே நஷ்டமா? என்ற கேள்விகள் தமிழக அரசியல் களத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன.

ஜெயலலிதா காலத்தில் அதிமுக-பாஜக கூட்டணி 1998, 2004 மக்களவைத் தேர்தல்களில் மலர்ந்தது. அதன் பிறகு பாஜகவுடன் இனி ஒருபோதும் கூட்டணி வைக்கமாட்டேன் என ஜெயலலிதா அறிவித்தார். 2014 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களுக்கு வளர்ச்சியை கொடுக்கப்போவது மோடியா? அல்லது இந்த லேடியா? என தேர்தல் களத்தில் கேள்வி எழுப்பி 37 தொகுதிகளை ஜெயலலிதா கைப்பற்றினார்.

அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை, நிரந்தர எதிரிகளும் இல்லை என்ற கூற்றுக்கேற்ப, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி மலர்ந்தது. ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே இந்தக் கூட்டணி வெற்றி பெற்றாலும், அரசியல் சூழல் காரணமாக 2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலிலும் இதே கூட்டணியே தொடர்ந்தது.

2019 மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம் எனக் கூறிய முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், பேரவைத் தேர்தலுக்குப் பிறகும் அதிமுக தோல்விக்கு பாஜகதான் காரணம், அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்ததால் சிறுபான்மையினர் வாக்குகளை மொத்தமாகவும், பாமகவுடன் கூட்டணி சேர்ந்ததால் தலித் வாக்குகளையும் இழந்ததால் அதிமுக தோல்வி அடைந்தது என விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற அதிமுக ஒன்றியச் செயலர்கள் கூட்டத்தில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
2019-இல் தேர்தல் தோல்விக்கு தங்களை குற்றஞ்சாட்டும்போது பொறுமையாகவும், பொறுப்பாகவும் பதில் கூறிய பாஜக, இந்த முறை கொஞ்சம் காட்டமாகவே பதிலடி கொடுத்தது. சிறுபான்மையினர் அதிகம் வாழும் உத்தர பிரதேசம், கோவா, வட கிழக்கு மாநிலங்களில் பாஜக அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது, பாஜக தோல்விக்கு அதிமுக அரசின் 4 ஆண்டுகால ஆட்சியில் எடுக்கப்பட்ட சில முடிவுகள்தான் காரணம் என பாஜக மாநிலப் பொதுச்செயலர் கே.டி.ராகவன் விழுப்புரத்துக்கு நேரடியாக வந்தே பதில் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தல் விரைவில் நடைபெற இருக்கும் நிலையில், அதிமுக-பாஜக உறவில் எவ்வித பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என கருதிய அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோர் பேரவைத் தேர்தல் கூட்டணி தொடரும் என உடனடியாக அறிவிப்பும் வெளியிட்டு இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டனர்.

சிறுபான்மை வாக்கு அரசியல்: அதிமுகவைப் பொருத்தவரை 1998, 2004 மக்களவைத் தேர்தல்களில் அதிமுக-பாஜக உறவு மலர்ந்த பின்னர் அதிமுகவுக்கு பதிவாகும் சிறுபான்மை வாக்குகள் முற்றிலும் குறைந்துவிட்டது என்பது மறுக்க முடியாத உண்மை. 2004-இல் கூட்டணி வைத்ததால் 2006 பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி இல்லாதபோதும் ஜெயலலிதா தலைமைக்கு சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கவில்லை.
2016 பேரவைத் தேர்தல் முடிவை நுட்பமாக ஆய்வு செய்து பார்த்தால் அதிகபட்சம் 3 சதவீத சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு கிடைத்திருக்கக்கூடும். அதுவும் 2019 மக்களவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி அமைந்ததால் அதிமுகவிடம் இருந்து திமுகவுக்கு மடைமாற்றமாகிவிட்டது. 2021 பேரவைத் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்தால் கூட ஏற்கெனவே இருந்த 3 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளை அதிமுக பெற்றிருக்க வாய்ப்பு மிகவும் குறைவு என்பதே மறுக்கவோ, மறைக்கவோ இயலாத உண்மை.
பாஜக வாக்கு வங்கி: சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்காது என முன்கூட்டியே நன்கு தெரிந்துதான் அதிமுக, பாஜகவை கூட்டணியில் சேர்த்துக்கொண்டது.

அப்படியிருக்க தேர்தலுக்குப் பிறகு பாஜகவால் தோல்வி அடைந்தோம், சிறுபான்மையினர் வாக்குகள் வரவில்லை என இப்போது கூறுவது எந்த வகையில் நியாயம் என்று கேள்வி எழுப்புகின்றனர் பாஜகவினர்.
3 சதவீத சிறுபான்மையினர் வாக்குகளை பாஜகவால் அதிமுக இழந்தது உண்மைதான்; ஆனால், பாஜகவால் அதிமுகவுக்கு 7 சதவீதத்துக்கும் மேல் கூடுதல் வாக்குகள் கிடைத்துள்ளது என்பதும் யாராலும் மறுக்க இயலாத உண்மை. தமிழக பாஜகவுக்கு எப்போதும் 2 முதல் 3 சதவீத வாக்கு வங்கி உள்ளது. தேவேந்திரகுல வேளாளர்கள் என்ற பெயர் மாற்றம் காரணமாக இந்த சமுதாயத்தினர் பிரதமர் மோடி மீது மிகுந்த பற்றுதல் அடைந்துள்ளனர். இதனால், தென் மாவட்டங்கள், காவிரி டெல்டா மாவட்டங்கள், கொங்கு மண்டலம் ஆகிய பகுதிகளில் வாழும் அந்த சமுதாயத்தினரின் சுமார் 5.5 சதவீத வாக்குகளில் குறைந்தபட்சம் 4 சதவீதத்துக்கும் மேல் இந்த முறை அதிமுக-பாஜக கூட்டணிக்கு பதிவாகின என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.
தேவேந்திரகுல வேளாளர் வாக்குகள்: 2016-இல் பேரவைத் தேர்தலில் அதிமுகவால் வெற்றிபெற முடியாத கடையநல்லூர், ஆலங்குளம் தொகுதிகளும், திருநெல்வேலி தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற முடியாத நயினார் நாகேந்திரன் தாமரை சின்னத்தில் 2021-இல் வெற்றி பெற்றதும், ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சியில் பாஜக வெற்றி பெற்றதும் தேவேந்திரகுல வேளாளர்கள் வாக்குகள் இந்த முறை முக்கியப் பங்கு வகித்துள்ளதை உணர்த்துகிறது.

சசிகலாவை ஒதுக்கி வைத்ததால் தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளில் ஏற்பட்ட பாதிப்பை தேவேந்திரகுல வேளாளர் சமுதாய வாக்குகள் சமன் செய்தன என்பதைத் தேர்தல் முடிவுகள் கோடிட்டு காட்டுகின்றன.
அதேபோல, 2019 மக்களவைத் தேர்தலின்போது கொங்கு மண்டலத்தில் வாழும் 30 சதவீத மொழிவழி சிறுபான்மையினர்களில் 25 சதவீதத்துக்கும் மேல் ராகுல் காந்தி பிரதமர் என்ற காரணத்தால் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்திருந்தனர்.

இந்த வாக்குகள் இயல்பாகவே மென்மையான ஹிந்துத்துவ வாக்குகள் என்பதால் திமுக ஆட்சியை விரும்பாமல் அதிமுக-பாஜக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர்.

கொங்கு மண்டலத்தில் மொத்தமுள்ள 64 தொகுதிகளில் அதிமுக 42 தொகுதிகளைக் கைப்பற்றவும், கோவையில் அனைத்துத் தொகுதிகளையும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் கணிசமான தொகுதிகளை அதிமுக-பாஜக கூட்டணி கைப்பற்றவும் பாஜகவும் ஒரு கருவியாக இருந்திருக்கிறது என்பது வாக்குச்சாவடி வாரியாக விழுந்த வாக்குகளை ஆய்வு செய்தால் புரியும்.

சேலம், தருமபுரியில் உதவிய பாமக: அதேபோல, பாமகவை கூட்டணியில் சேர்த்ததால் அதிமுகவுக்கு தலித் வாக்குகள் விழவில்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியிருப்பதும் உண்மைதான்.

திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கடலூர், பெரம்பலூர், அரியலூர் என வன்னியர்கள் அடர்த்தியாக வாழும் வட மாவட்டங்களில் மொத்தமுள்ள 65 தொகுதிகளில் அதிமுக 11 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இருப்பினும், சுமார் 40 சதவீத வாக்குகளை நெருங்கி வந்துதான் தோற்றது. தேர்தலில் ஆட்சியைக் கைப்பற்ற முடியாமல் தோல்வி அடைந்தாலும் 33 சதவீத வாக்கு வங்கியை அதிமுக பெற பாமகவும் உதவியது.

சேலம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 10 தொகுதிகள், தருமபுரி மாவட்டத்தில் மொத்தமுள்ள 5 தொகுதிகள் என இரு மாவட்டங்களிலும் மிகப் பெரிய வெற்றியை அதிமுக குவிக்க பாமகவின் வாக்கு வங்கியும் முக்கியக் காரணம். பாஜகவுடன் கூட்டணி சேர்ந்தால் சிறுபான்மையினர் வாக்குகளையும், பாமகவுடன் கூட்டணி சேர்ந்தால் தலித் வாக்குகளையும் நிச்சயம் இழக்க நேரிடும் என்பது தெரிந்தும், பிற வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுவிடலாம் என்ற இலக்குடனும் கூட்டணி வைத்தது அதிமுக. தேர்தல் தோல்விக்குப்பிறகு இரு கட்சிகள் மீதும் குற்றச்சாட்டுகளை வீசுவது நியாயம் அல்ல என்பது நடுநிலையாளர்களின் கருத்து.

சி.வி.சண்முகம் சொல்வதுபோல வடமாவட்டங்களில் பாஜக தயவு அதிமுகவுக்கு தேவையில்லை என அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களோ அல்லது தொண்டர்களோ கருதலாம். ஆனால், ஜாதிய முரண்பாடுகளைக் களைந்து அனைத்து சமுதாய வாக்குகளையும் கொண்டுவர பாஜகவின் ஹிந்துத்துவ தத்துவம் தேவை என அதிமுக கட்சித் தலைமை கருதக்கூடும். அதனால்தான், பாஜகவின் நெருடலை சரிசெய்ய ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி கே. பழனிசாமியும் இணைந்து பாஜக கூட்டணி தொடரும் என அறிக்கை வெளியிட்டனர்.

அதிக வாக்கு வலிமையுடன் கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் தகுதியுடைய கட்சி தான் அதிமுக. இருந்தாலும், மென்மையான ஹிந்துத்துவ வாக்குகளைக் கவர பாஜகவும், அதிமுகவின் வாக்கு வங்கியை உயர்த்த பாமகவும் கருவிகளாக பேரவைத் தேர்தலில் இருந்திருக்கின்றன என்பதுதான் நிதர்சனமான உண்மை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com