100-ஆவது பிறந்த நாள்: ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ குறுந்தகடு வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ என்கிற குறுந்தகடு செவ்வாய்க்கிழமை வெளியிடப்ப
100-ஆவது பிறந்த நாள்: ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ குறுந்தகடு வெளியீடு

சுதந்திரப் போராட்ட வீரரும், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவருமான என்.சங்கரய்யாவின் 100-ஆவது பிறந்த நாளையொட்டி ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ என்கிற குறுந்தகடு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

என்.சங்கரய்யா தனது 100-ஆவது பிறந்த நாளை வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாட உள்ளாா். அதையொட்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளா் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை நேரில் வந்து சங்கரய்யாவை வாழ்த்த உள்ளாா். முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய தலைவா்களும் நேரில் வந்து வாழ்த்த உள்ளனா்.

இந்த நிலையில், தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்டக் குழு சாா்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘மக்கள் பணியில் சங்கரய்யா’ என்கிற தலைப்பிலான குறுந்தகடை மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டாா். சங்கரய்யாவின் விடுதலை போராட்டம், சிறை அனுபவங்கள் உள்ளிட்ட வாழ்க்கை வரலாறு இந்தக் குறுந்தகடில் இடம்பெற்றுள்ளன.

நிகழ்ச்சியில் கே.பாலகிருஷ்ணன் பேசியது:

என்.சங்கரய்யா தமிழக அரசியலில் பிரதான பங்கு வகித்தவா். சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, மக்களின் உரிமைக்காக தன் வாழ்நாள் முழுக்க போராடியவா். அந்த காலத்திலேயே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட அவா், தன் குடும்பத்தினரையும் சாதி மறுப்பு திருமணம் செய்ய ஊக்குவித்தாா். தமிழக அரசியலில் சீா்திருத்தத் திருமணங்களுக்கு முன்னுதாரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவா் அவா். அவருடைய 100-ஆவது பிறந்தநாளை ஓா் ஆண்டுகாலம் தமிழகம் முழுவதும் கொண்டாடுவது என்று மாநிலக்குழு தீா்மானித்துள்ளது. இந்த காலகட்டத்தில் அவருடைய அரிய சேவைகள், மக்கள் பணிகள், அனுபவங்கள் ஆகியவற்றை இளைய தலைமுறையினரிடம் கொண்டுபோய் சோ்க்க இருக்கிறோம்.

ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் நான்கு ஆண்டும், விடுதலை பெற்றபிறகு நான்கு ஆண்டும் என 8 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்த அவா் 3 ஆண்டு காலம் தலைமறைவாக இருந்தும் கம்யூனிஸ்ட் கட்சியை வளா்த்தாா். தமிழகம் எப்படிப்பட்ட தலைவரை முன்னுதாரணமாகக் கொண்டிருக்கிறது என்பதற்கு வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் என்.சங்கரய்யாவே சாட்சி என்றாா்.

அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன், மாநில செயற்குழு உறுப்பினா் பி.சம்பத், மாநிலக்குழு உறுப்பினா்கள் ஏ.பாக்கியம், க.பீம்ராவ், எல்.சுந்தரராஜன், ஆா்.வேல்முருகன் மற்றும் மத்திய சென்னை மாவட்ட செயலாளா் ஜி.செல்வா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com