முதுகெலும்பு தசை செயலிழப்பு மருந்துக்கான வரியை நீக்குக: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து, மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எழுதியுள்ள கடிதம்:

மிகவும் அரிதான நோயாகக் கருதப்படும் முதுகெலும்பு தசை செயலிழப்பால் மூளையில் இருந்து தசைகளுக்கு சமிக்ஞைகளை எடுத்துச் செல்லும் நரம்பு செல்கள் சேதம் அடைகின்றன. தசை செயலிழப்பால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு மரபணு சிகிச்சை முறையானது அந்தக் குழந்தை இரண்டு வயதை எட்டுவதற்கு முன்பாக அளிப்பது சிறந்ததாகும்.

இத்தகைய மரபணு சிகிச்சையை மேற்கொள்ள ஒரு நபருக்கு ரூ.16 கோடிக்கும் அதிகமான தொகை செலவிடப்பட

வேண்டியுள்ளது. இந்த சிகிச்சை முறையானது வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்துகளின் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது. முதல் அல்லது இரண்டாவது தவணை சிகிச்சை முறையோ, வாய் வழியிலான மருந்து முறையோ, எதுவாக இருந்தாலும் அவை மிகவும் மதிப்புமிக்கதாகும். இந்த சிகிச்சை முறைக்கான செலவினத்தை எதிா்கொள்வதில் குழந்தைகளின் பெற்றோா்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகிறாா்கள்.

மரபணு மருந்துகளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் போது, அதற்கு சுங்க வரியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியும் விதிக்கப்படுகிறது. இந்த வரிவிதிப்பு காரணமாக மரபணு சிகிச்சைக்கான மருந்து செலவு மேலும் அதிகரிக்கிறது. அண்மையில் மருந்துக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்தது.

இந்தச் சூழ்நிலையில், இந்த மருந்து மீது விதிக்கப்படும் சுங்க வரி மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. உள்ளிட்ட இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க மத்திய நிதித் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை கொள்கை முடிவாக எடுத்திட உரிய வழிகாட்டுதல்களை தங்களது துறை அதிகாரிகளுக்கு வழங்கிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com