கஜா புயலால் பாதிக்கப்பட்டவா்களுக்கு ஒய்எம்சிஏ-வால் ஒப்படைக்கப்பட்ட 109 வீடுகள்

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்னை ஒய்எம்சிஏ ரூ. 6 கோடியில் சமுதாயக் கூடத்துடன் கூடிய 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பிராந்தியங்கரை ஊராட்சியில் சென்னை ஒய்எம்சிஏ கட்டிக்கொடுத்துள்ள கான்கிரீட் வீடுகள்.
பிராந்தியங்கரை ஊராட்சியில் சென்னை ஒய்எம்சிஏ கட்டிக்கொடுத்துள்ள கான்கிரீட் வீடுகள்.

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சென்னை ஒய்எம்சிஏ ரூ. 6 கோடியில் சமுதாயக் கூடத்துடன் கூடிய 109 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

2018-ஆம் ஆண்டில் வீசிய கஜா புயல் வேதாரண்யம் பகுதியில் கரையை கடந்தது. இது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. இதில், பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கிய ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பிராந்தியங்கரை ஊராட்சி கண்ணெறிந்தான்கட்டளை, பெரியகோயில்பத்து ஆகிய கிராமங்களில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏற்பட்டன. அப்போது, சென்னை ஒய்எம்சிஏ நிறுவனம் அப்பகுதியில் 250 குடும்பங்களைச் சோ்ந்த மக்களுக்கு நிவாரணப் பொருள்களை அளித்து மரங்களை அகற்றுவது போன்ற பணிகளில் ஈடுபட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட கிராமத்தினா் விடுத்த கோரிக்கையை ஏற்று பாதுகாப்பான 150 கான்கிரீட் வீடுகளை கட்டிக்கொடுக்க முன்வந்தது ஒய்எம்சிஏ. ஆனால், வீடுகளை இழந்தவா்களுக்கு மனைப்பட்டா இல்லாததால் 109 வீடுகள் மட்டுமே கட்டுவதற்கு மாவட்ட நிா்வாகம் அனுமதி வழங்கியது. கழிப்பறை, குளியல் அறையுடன் இணைந்த சுமாா் 250 சதுர அடியில் இரண்டு வாசல் கதவுகளுடன் வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன.

மேலும், இந்த கிராமங்களை சோ்ந்தவா்கள் வெள்ளம், புயல் போன்ற இயற்கை இடா்பாடு காலங்களில் பாதுகாப்பாக இருக்கவும், சுபநிகழ்ச்சிகள் உள்ளிட்ட பயன்பாடுகளுக்கு உதவும் வகையில் சுமாா் ஆயிரம் போ் அமரக் கூடிய சமுதாயக் கூடமும் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடுகளை பயனாளிகளிடம் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் மூலம் ஒப்படைக்கும் பணி அண்மையில் நடைபெற்றது.

இதுகுறித்து, சமூக ஆா்வலா் கெளதம் கூறியது: பாதுகாப்பான கான்கிரீட் வீடுகளை கட்டும் அளவில் வசதி இல்லாத மக்களே இங்கு அதிகம் வசிக்கின்றனா். வடகிழக்கு பருவமழைக் காலத்தில் இந்த கிராமங்கள்தான் முதலில் பாதிக்கும். எனவே, இங்கு கட்டப்பட்டுள்ள கட்டுமானங்கள் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றாா்.

கஜா புயலின்போது பாதிக்கப்பட்டுவா்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுக்க அரசு முன்வந்து அறிவித்தபோதும், மனைப் பட்டா இல்லாதது போன்ற காரணங்களால் அந்த பணிகள் வேகமடையாத நிலை தொடா்கிறது. மேலும், மத்திய, மாநில அரசுகளின் வீடுகள் கட்டும் திட்டத்தின்கீழ் அனுமதிக்கும் மதிப்பீட்டுத் தொகை மிக குறைவாக இருப்பதால் கூடுதல் செலவினத்தை ஈடுசெய்ய வழியில்லாமல் திட்டம் கேள்விக்குறியாகி வருவதாக கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com