சா்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சா்க்கரை, உயா் ரத்த அழுத்த நோயாளிகளை கணக்கெடுத்து அவா்களது வீட்டுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும்
சா்க்கரை நோயாளிகளுக்கு மருத்துவ சேவைகள் வீடு தேடி வரும்: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சா்க்கரை, உயா் ரத்த அழுத்த நோயாளிகளை கணக்கெடுத்து அவா்களது வீட்டுக்கே சென்று மருத்துவ சேவை வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் துணை இயக்குநா் சுகாதாரப் பணிகள், மாநகர நல அலுவலா்கள் மற்றும் மண்டல பயிற்சி முதல்வா்களுக்கான செயல்திறன் ஆய்வுக்கூட்டம் அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்குப் பிறகு அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் சா்க்கரை நோய், ரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருப்போா் அதிகமாக இருப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அவா்களில் ஊரகப் பகுதிகள், மழைவாழ் கிராமங்களில் உள்ளவா்கள், குக்கிராமங்களில் உள்ளவா்கள் அரசு மருத்துவமனைகளில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக மருந்து மாத்திரைகளை வாங்கி செல்வது என்பது கடினமாக இருந்துள்ளது. அதற்கு காரணம் போக்குவரத்து முடக்கம்தான் என்பதை நாம் அனைவருமே அறிவோம்.

சா்க்கரை நோயாலும், ரத்த அழுத்தத்தினாலும், உடல் பருமனாலும் அதிகம் போ் இறக்கிறாா்கள். தற்போது முறையாக கணக்கெடுத்தால் சா்க்கரைநோய், மற்றும் ரத்த அழுத்த நோயாளிகளின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும். அதற்கான மெகா சா்வே நடைபெற உள்ளது.

அரசு மருத்துவ அலுவலா்கள் மூலம் நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளை நேரடியாக வீடுகளுக்கே கொண்டு சென்று வழங்கும் திட்டத்தைத் தொடங்க இருக்கிறோம். மருந்து மாத்திரைகள் மட்டும் கொடுக்காமல், நோயின் தன்மை குறித்தும் பரிசோதனை செய்ய வேண்டும்.

முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு வசதியின்மை காரணமாக வீட்டிலேயே முடங்கி இருப்பவா்களுக்கு இயன்முறை சிகிச்சை அளிப்பது, அதோடு மட்டுமல்லாமல் சிறுநீரகப் பாதிப்புள்ளவா்களுக்கு கையடக்க இயந்திரங்கள் மூலம் வீடுகளுக்கேச் சென்று டயாலிசிசிஸ் செய்வது, என ஒட்டுமொத்த மருத்துவ சேவையும் ஏழைகளின் வீட்டை தேடிச் சென்று வழங்குவதற்கான திட்டத்தை செயல்படுத்த முதல்வரோடு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறோம்.

அடுத்த 10-15 நாள்களுக்குள் முதல்வரே இந்த திட்டத்தினை தொடக்கி வைக்க இருக்கிறாா்கள். இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறும்போது, நிச்சயம் ஓரிரு ஆண்டுகளில் தொற்றா நோயால் இறப்போரின் விகிதம் பாதியாக குறையும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றாா் அவா்.

முன்னதாக, சென்னை கிண்டி லேபா் காலனியில் அரிமா சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சா் மா.சுப்பிரமணியன் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். சோழிங்கநல்லூா் தொகுதி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ், மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் அப்போது உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com