சிவராத்திரிக்கு பொது விடுமுறை?: முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு. 
சிவராத்திரிக்கு பொது விடுமுறை?: முதல்வருடன் பேசி முடிவெடுக்கப்படும்

தமிழகத்தில் மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு.
 கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோயில்களில் நடைபெற்று வரும் புனரமைப்புப் பணிகளை, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் த.மனோதங்கராஜுடன் சேர்ந்து 2}ஆவது நாளாக செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:
 திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் இயங்கிய பல கோயில்கள் தற்போது இந்து சமய அறநிலையத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்கோயில்கள் மற்றும் சிற்பங்களை சிறந்த முறையில் பராமரிக்கவும், பக்தர்கள் சுவாமி தரிசனம் மேற்கொள்ள நல்ல சூழலை ஏற்படுத்தவும், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
 அதன்பேரில், திக்குறிச்சி அருள்மிகு மகாதேவர் திருக்கோயிலில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அதன் கிழக்கு வாசல் பகுதியில் ஓடும் தாமிரவருணி ஆற்றின் கரையில் தண்ணீர் மோதுவதால் மதில் சுவரின் பலம் குறைந்துள்ளதை அறிந்தோம். அதை உறுதிப்படுத்தும் பணிகளை மேற்கொள்வதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 இதேபோல், குழித்துறை தேவஸ்தானத்தின் கீழ், சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு செயல்பட்டு வந்த தேவஸ்வம் தொடக்கப் பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளிகள் பழுதடைந்து காணப்படுகின்றன. அவற்றில் படிப்பகம் ஏற்படுத்தும் வகையிலும், குழித்துறையில் பாழடைந்துள்ள 400 ஆண்டுகள் பழைமைவாய்ந்த அரண்மனையை புனரமைத்து, பாதுகாக்கவும் இந்து சமய அறநிலையத்துறை முழுமையான முயற்சியை மேற்கொள்ளும். மகா சிவராத்திரிக்கு பொதுவிடுமுறை அளிப்பது குறித்து முதல்வரிடம் கலந்துபேசி முடிவெடுக்கப்படும்.
 யானைகளுக்குப் பரிசோதனை: தமிழகத்தில் உள்ள பல்வேறு திருக்கோயில்களில் 30 யானைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு 30 நாள்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது,15 நாள்களுக்கு ஒருமுறை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, உணவு வகைகளும் மருத்துவக் குழுவினரால் கண்காணிக்கப்படுகின்றன.தேவையான கோயில்களுக்கு யானைகளை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார் அவர்.
 பின்னர், நாகர்கோவில் கிருஷ்ணன்கோயில் பிரகாரங்கள், நாகராஜா கோயில் ஆகியவற்றில் ஆய்வு செய்த அமைச்சரிடம், கோயில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு பால் ஊற்றி வழிபட அனுமதிக்க வேண்டுமென்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.
 ஆய்வின்போது, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், ஆட்சியர் மா.அரவிந்த், எம்எல்ஏக்கள் சி.விஜயதரணி(விளவங்கோடு), எம்.ஆர்.காந்தி (நாகர்கோவில்), முன்னாள் அமைச்சர் என்.சுரேஷ்ராஜன், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையர் சி.செல்வராஜ், உதவி ஆணையர் ரத்தினவேல் பாண்டியன், மராமத்து பொறியாளர் அய்யப்பன், மண்டைக்காடு தேவஸ்தானம் பள்ளி முதல்வர் எஸ்.சாந்தை, ஏ.பி.ராஜன், ஜெயசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com