3 நாள்களில் 78 லட்சம் மகளிர், கட்டணமில்லா பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் 

கடந்த 3 நாட்களில் நகரப் பேருந்துகளில் 78 லட்சம் மகளிர், கட்டணமில்லா பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். 
3 நாள்களில் 78 லட்சம் மகளிர், கட்டணமில்லா பயணம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் 

கடந்த 3 நாட்களில் நகரப் பேருந்துகளில் 78 லட்சம் மகளிர், கட்டணமில்லா பயணம் செய்துள்ளனர் என்று போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை அவர் கூறுகையில், முதல்வரின் உத்தரவின்பேரில் நகரப் பேருந்துகளில் மகளிருக்கு கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ள அடையாள பயணச்சீட்டு 12.07.2021 முதல் பேருந்துகளில் வழங்கப்பட்டு வருகிறது. 
12.07.2021 முதல் 14.07.2021 தேதி வரையில் கடந்த மூன்று நாட்களில், 7,291 நகரப் பேருந்துகளில், 78 இலட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். 40% மகளிர் பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு, தற்போது 60% வரை மகளிர் பயணம் செய்கின்றனர். திருநெல்வேலி கோட்டத்தில் மட்டும் 68% மகளிர் பயணம் மேற்கொண்டுள்ளனர். 
14.07.2021 அன்று மட்டும் 28 இலட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளனர். மேலும், கடந்த மூன்று நாட்களில் 5,741 திருநங்கையர்கள், 51,615 மாற்றுத்திறனாளிகள் மற்றும் 8,356 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள் கட்டணமில்லாமல் பயணம் செய்துள்ளனர். இத்திட்டத்தினால் மகளிருக்கு பணச் செலவு மிச்சமாகிறது. அந்த மிச்சமாகும் பணத்தை குடும்பச் செலவுக்கு பயன்படுத்துகின்றனர். 
பொது மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள இத்திட்டத்திற்கு, பொது மக்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிக்கின்றனர். முதல்வரின் உடனடி உத்தரவிற்கு இணங்க 14.07.2021 அன்று வெளிவந்த பத்திரிக்கைச் செய்தியின் அடிப்படையில், செங்கல்பட்டு மாவட்டம், பழவேலி மலை கிராமத்திற்கு 14.07.2021 அன்றே பேருந்து இயக்கப்பட்டது. நிர்பயா திட்டத்தின் கீழ் 2,500 மாநகர் பேருந்துகளில், சிசிடிவி கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டீசல் விலை உயர்வு அதிகமானாலும் பேருந்து கட்டணம் உயர்த்தபட மட்டாது. புதுச்சேரிக்கு 364 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
முதல்வர், போக்குவரத்துத் துறை என்பது பொது மக்களுக்கான சேவைத் துறை என்பதினால், மிகுந்த கவனத்துடன் மக்கள் கஷ்டபடமால் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் / சீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
பொது மக்கள் சிரமமில்லாமல் பயணம் மேற்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. நிறுத்தப்பட்ட வழித்தடங்களில் படிப்படியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் அவரவர் பகுதிகளில், பேருந்துகள் இயக்க கோரப்படும் கோரிக்கைகள், முதல்வரின் அறிவுரைப்படி நிறைவேற்றப்பட்டு வருகிறது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com