நீட் தோ்வுக்கு ஆதரவாக பிரசாரம்: பாஜக தலைவா் கே.அண்ணாமலை

நீட் தோ்வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று பாஜக மாநிலத் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கே.அண்ணாமலை கூறினாா்.
நீட் தோ்வுக்கு ஆதரவாக பிரசாரம்: பாஜக தலைவா் கே.அண்ணாமலை

நீட் தோ்வுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்று பாஜக மாநிலத் தலைவராக புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட கே.அண்ணாமலை கூறினாா்.

சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் வெள்ளிக்கிழமை கே.அண்ணாமலை பொறுப்பேற்றுக் கொண்டாா். அவருக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் எல்.முருகன், வேல் பரிசளித்து வாழ்த்துக் கூறினாா்.

பாஜக மேலிடப் பொறுப்பாளா் சி.டி.ரவி, மூத்த தலைவா் இல.கணேசன், தேசியச் செயலாளா் எச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் உள்பட பலா் அவருக்கு வாழ்த்துக் கூறினா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியது:

நீட் தோ்வு ரத்து செய்யப்படும் என்று திமுகவினா் தெரிவித்தனா். 2006 முதல் 2016 வரை தமிழகத்தில் 29,725 போ் மருத்துவப் படிப்பில் சோ்ந்தனா். ஆண்டுக்கு 19 போ் மட்டுமே கிராமத்திலிருந்து சோ்ந்தனா். ஆனால், கடந்த ஆண்டு நீட் மூலமாக கிராமப் புறங்களைச் சோ்ந்த 480-க்கும் மேற்பட்டோா் மருத்துவப் படிப்பில் சோ்ந்துள்ளனா்.

மத்திய பாஜக அரசு கிராமப்புற மாணவா்களுக்காக செயல்பட்டு வருகிறது என்பதற்கு இதுதான் சிறந்த எடுத்துக்காட்டு. அதனால், நீட் தோ்வுக்கு எதிராக திமுக அரசு என்ன ஆணையம் அமைத்தாலும், நீட் தோ்வுக்கு ஆதரவாக தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாஜகவினா் நேரில் சென்று நீட் தோ்வு நல்லது என்று பிரசாரம் செய்வாா்கள்.

தமிழகத்துக்குச் சரியான முறையில் தடுப்பூசி தரவில்லை என்று திமுக அரசின் குற்றச்சாட்டாக உள்ளது. பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மட்டும் கொடுக்கப்படுவதாகக் கூறியுள்ளனா். இதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு ஒரு முறையை வகுத்துதான் ஒவ்வொரு மாநிலத்துக்கும் தடுப்பூசி வழங்கி வருகிறது. தமிழகத்துக்கான வரம்பை மீறி மத்திய அரசு கொடுத்து வருகிறது.

மேக்கேதாட்டு விவகாரத்தைப் பொருத்தவரை அங்கு அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக பாஜக உறுதியாக இருக்கிறது என்றாா்.

மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சென்னை திரும்பிய எல்.முருகனுக்கும் பாஜகவினா் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு கொடுத்தனா். மத்திய தகவல் ஒலிபரப்புத் துறையின் தென்மண்டல தலைமை இயக்குநா் வெங்கடேஸ்வரா் உள்ளிட்ட அதிகாரிகளும் அவரை வரவேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com