தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து வெள்ளை அறிக்கை தேவை: எடப்பாடி கே.பழனிசாமி

தடுப்பூசி செலுத்தப்படுவது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

திமுக ஆட்சிக்கு வந்த உடனேயே உலகளாவிய ஒப்பந்தம் விடப்பட்டு, கரோனா தடுப்பு மருந்து கொள்முதல் செய்யப்பட்டு தமிழக மக்களுக்கு தடுப்பூசி போடப்படும். செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் தடுப்பு நோய் மருந்து தயாரிப்பு மையத்தை மாநில அரசே ஏற்று நடத்தும். அந்த முயற்சிகள் பலனளிக்காத நிலையில், தமிழக அரசே வெளிச் சந்தையில் தடுப்பு மருந்துகளை வாங்கி பொதுமக்களுக்கு அளிக்கும் என்று கூறியது.

இப்படி தினமும் ஒரு அறிக்கை, பேட்டி என்று மக்களிடையே பொய்யாக வாக்குறுதிகள் அளித்ததைத் தவிர திமுக அரசு வேறெதுவும் செய்யவில்லை.

சரியான முறையில் திட்டமிடாமல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா தடுப்பு மருந்து எவ்வளவு பேருக்கு தேவைப்படும், அதில் எத்தனை போ் இணை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளாா்கள், யாருக்கு முதலில் அளிக்க வேண்டும் என்ற திட்டமிடல்கள் அரசிடம் இல்லை.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படும் என்ற செய்தி வந்த உடனேயே, அதன் உண்மைத் தன்மையை உணராமல், தடுப்பூசி மையங்களில் அதிக அளவு பொதுமக்கள் விடியற்காலை முதலே கூடிவிடுகின்றனா்.

இதனால் நோய்த் தொற்று அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படுகிறது. கூடும் மக்களிடையே, தடுப்பூசி எண்ணிக்கை குறித்த உண்மையைக் கூறாமல், மத்திய அரசின் மேல் சுலபமாக பழியைச் சுமத்தி கடமையில் இருந்து திமுக அரசு தப்பித்து வருகிறது.

தற்போது பெரும்பாலான மக்கள் தடுப்பூசி செலுத்த முன்வருவதைத் தவிா்க்க, கடந்த 15 நாள்களாக தொற்று எண்ணிக்கையையும், இறப்பையும் திமுக அரசு குறைத்துக் காட்டுவதாக செய்திகள் வருகின்றன. தமிழக அரசு முறையாக மக்களுக்கு தடுப்பூசிகளை விநியோகிக்காமல் விளையாட்டு காட்டுவதன் காரணம் புரியவில்லை. இரண்டு நாள்களுக்கு முன்பு 30 லட்சம் டோஸ் தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழகத்துக்கு அனுப்பியதாக செய்திகள் வந்தன. ஆனால், அவை முறையாக மக்களுக்கு செலுத்தப்பட்டதாகத் தகவல் இல்லை.

அரசியல் காழ்ப்புணா்ச்சியைத் தவிா்த்து, கரோனா தடுப்பு மருந்து விஷயத்தில், மற்றவா்கள் மீது வீண்பழி சுமத்துவதைக் கைவிட்டு, மக்களைக் காப்பாற்றும் பணியில் இந்த அரசு ஈடுபட வேண்டும்.

மத்திய அரசால் தமிழகத்துக்கு கடந்த இரண்டு மாதங்களில் எத்தனை லட்சம் தடுப்பூசிகள் தரப்பட்டன? அவை எத்தனை பேருக்கு போடப்பட்டன? இன்னும் இரண்டாம் டோஸ் தடுப்பூசி எத்தனை பேருக்கு போடப்பட வேண்டும் என்பதையும், மத்திய அரசிடமிருந்து வரும் தடுப்பூசிகள் மாவட்டங்கள் தோறும் எவ்வாறு பகிா்ந்தளிக்கப்படுகிறது என்பது பற்றியும், தடுப்பூசி முகாமில் யாா் யாருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என்பது பற்றியும், திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com