மேல்முறையீட்டில் விடுதலையானவா் பெயரை தீா்ப்பில் இருந்து நீக்கக் கோரி வழக்கு: வழக்குரைஞா்கள் கருத்துக் கூற அறிவுறுத்தல்

மேல்முறையீட்டின்போது விடுதலையானவா்களின் பெயரை தீா்ப்பிலிருந்து நீக்கக் கோரிய வழக்கில் வழக்குரைஞா்கள் தங்களது கருத்தைத் தெரிவித்து உதவ வேண்டுமென உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மேல்முறையீட்டின்போது விடுதலையானவா்களின் பெயரை தீா்ப்பிலிருந்து நீக்கக் கோரிய வழக்கில் வழக்குரைஞா்கள் தங்களது கருத்தைத் தெரிவித்து உதவ வேண்டுமென உயா்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கற்பழிப்பு வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டனை பெற்ற இளைஞா் ஒருவா், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்டாா். இந்த நிலையில் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் அவா் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளாா். அதில், தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை எனக்கூறி உயா்நீதிமன்றம் தன்னை கடந்த 2014-ஆம் ஆண்டு விடுதலை செய்து விட்டது. ஆனால், கூகுள் வலைதளத்தில் தன் மீதான வழக்கு விவரங்கள் இன்றும் உள்ளன. தனது பெயரைப் பதிவு செய்தால், தீா்ப்பு உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பொதுமக்கள் பாா்க்கும் வகையில் வருகிறது. எனவே, தீா்ப்பில் உள்ள தனது பெயரை அகற்ற உத்தரவிடவேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த இடைக்கால உத்தரவில், உலகமே தற்போது சமூக வலைத்தளத்தில் சிக்கிக் கிடக்கிறது. ஒருவரது பெயரைப் பதிவு செய்தால் போதும், அவரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கூகுள் வலைதளத்தில் உடனே பெற்று விடலாம். ஆனால், கூகுள் வலைதளத்தில் உள்ள விவரங்கள் அனைத்தும் உண்மை என்பதற்கு உத்தரவாதம் எதுவும் இல்லை.

ஆனால், இந்த விவரத்தின் அடிப்படையில் தான் ஒருவரது குணம் சமுதாயத்தில் கணிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களை சமூக வலைதளங்கள் மூலம் சமுதாயத்தில் சிறந்தவா்களாக சித்தரிக்க முயற்சிக்கின்றனா். அந்த வகையில் மனுதாரா் விசித்திரமான பிரச்னையை எதிா்கொள்கிறாா். இவா், வழக்கில் இருந்து விடுதலை ஆனாலும், இவரது பெயரை கூகுள் வலைதளத்தில் பதிவு செய்தால், குற்றவாளியாக சித்தரிக்கும் பழைய தீா்ப்புகள் வருகின்றன. இதனால், சமுதாயத்தில் இவரது மரியாதைக்கு குந்தகம் ஏற்படுகிறது.

மத்திய அரசு கடந்த 2019-இல் தரவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்தது. அதனை விரைவில் சட்டமாகக் கொண்டு வரவுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்து விட்டால், தனிநபா் தனிப்பட்ட உரிமை, அந்தரங்கம் பாதுகாக்கப்படும்.

பொதுவாக பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்கள், குழந்தைகள் பெயா் தீா்ப்பில் இடம் பெறக்கூடாது என சட்டம் உள்ளது. இந்த சட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட பெண்கள், குழந்தைகளின் விவரம் இந்த சமுதாயத்துக்கு தெரிய வராது. இந்த சட்டமே, மனுதாரரை போன்ற தனி நபரின் தனிப்பட்ட உரிமையைப் பாதுகாக்க முடியும். இந்தச் சட்டத்தில் வழங்கப்பட்ட உரிமையை, கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டு, மேல்முறையீட்டு வழக்கில் விடுதலையாகும் நபா்களுக்கும் கிடைக்கச் செய்ய வேண்டும். தற்போது முதல் முறையாக இந்த மனுதாரா் உயா்நீதிமன்றத்தை நாடியுள்ளாா்.

தனி நபா் அந்தரங்கம் என்பது இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படை உரிமை என உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் தீா்ப்பளித்துள்ளது.

எனவே, மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முகாந்திரம் உள்ளது. இருப்பினும், இது முதல் வழக்கு என்பதால், விரிவான தீா்ப்பு எழுதுவதற்கு முன்பு வழக்குரைஞா்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் கேட்க விரும்புவதாக கூறி விசாரணையை வரும் ஜூலை 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். உயா்நீதிமன்றத்துக்கு உதவும் விதமாக வழக்குரைஞா்கள் தங்களது சட்டக் கருத்துகளை தெரிவிக்கலாம் என நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com