கூத்தாநல்லூர்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர்.
கூத்தாநல்லூர்: இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிவாசல்களில் பக்ரீத் தொழுகை

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிவாசல்களில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமியர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும், பக்ரீத் என அழைக்கக்கூடிய தியாகத் திருநாள் பண்டிகையையும் வெகுச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று, ஊரடங்கால் பள்ளி வாயில்களே மூடப்பட்டு விட்டன. தினமும் நடத்தும் தொழுகை மற்றும் ரம்ஜான், பக்ரீத் உள்ளிட்ட அனைத்து தொழுகைகளையும் அவரவர்களின் இருப்பிடத்திலேயே நடத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது, கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்டு, வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்பட்டன. அதன்படி, தியாகத் திருநாள் தொழுகையை பள்ளிவாசல்களில் மகிழ்ச்சியுடன் நடத்தினர்.

சின்ன சிங்கப்பூர் என அழைக்கப்படும் கூத்தாநல்லூர் பெரியப் பள்ளிவாசல் வளாகத்தில், காலை 6.30 மணிக்கு இமாம் ஏ.எல்.முகம்மது அலி உரை நிகழ்த்தினார். அதைத் தொடர்ந்து, கரோனா தொற்று விதிமுறைகளின்படி ஏராளமானவர்கள் கூட்டுத் தொழுகை நடத்தினர். இதேபோல், மேலப்பள்ளி, சின்னப் பள்ளி, மஸ்ஜித் கதீஜா, ரஷீதியா பள்ளி, ஹமீதிய்யா பள்ளி, அன்வாரியா பள்ளி, ரஹீமீய்யா பள்ளி, சிஷ்தி நகர் பள்ளி, தைக்கால் பள்ளி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பள்ளி உள்ளிட்ட 21 பள்ளி வாசல்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் தொழுகை நடத்தினர்.

மேலும் இதேபோல், பொதக்குடி என்.ஏ. நூரூல் அமீன் விளையாட்டு மைதானத்தில், பொதக்குடி பெரிய பள்ளிவாசல் இமாம் பி.ஹெச்.ஸலாஹுதீன் பாஜில் பாகவி உரை நிகழ்த்த, மேலப்பள்ளி வாசல் இமாம் அபுல் ஹஸன் ஷாதலி தொழுகை நடத்தினார். தொழுகையில், பொதக்குடி ஊர் உறவின்முறை ஜமாஅத் நிர்வாக சபை அறப்பணிச் சங்கம், பெரியப் பள்ளி வாசல், மேலப்பள்ளி வாசல், புதுமனை பள்ளி வாசல், பாத்திமா பள்ளி வாசல், ஜன்னத்துல் ஃபிர்தவுஸ் பள்ளி வாசல் உள்ளிட்ட பள்ளி வாசல்களைச் சேர்ந்த ஏராளமானவர்கள் தொழுகை நடத்தினார்கள்.

மேலும், பூதமங்கலம், அத்திக்கடை உள்ளிட்ட பள்ளிவாசல்களிலும் தொழுகை நடத்தினர். தொழுகைக்குப் பிறகு, குர்பானி எனச் சொல்லக் கூடிய ஆடுகள் அறுக்கப்பட்டன. அறுக்கப்பட்ட ஆடுகளை 3 பங்காகப் பிரித்து, தனக்கு ஒரு பங்கு எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து, உறவினர்களுக்கும், நண்பர்கள், ஏழை, எளிய அனைத்து சமுதாயத்தினருக்கும் வழங்கி, மகிழ்ந்தனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவதால், பெரியவர்கள், இளைஞர்கள் மற்றும் சிறியவர்கள் என அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். விடியற்காலையிலேயே குளித்து விட்டு, புத்தாடை அணிந்து பள்ளி வாசலுக்குப் புறப்பட்டனர். ஏழை, எளியவர்களுக்கு உதவிகள் செய்து மகிழ்ச்சியாக தியாகத் திருநாளைக் கொண்டாடினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com