தமிழகத்தின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்,
தமிழகத்தின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்த நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின்


சென்னை: தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் பொதுமக்கள் மற்றும் இளையதலைமுறையினரின் பங்களிப்பை அதிகரித்திட வேண்டும் என்று சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் அடுத்த 10 ஆண்டுகளில் இத்துறைகளில் தொலைநோக்குடன் செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (22.7.2021) தலைமைச் செயலகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மரம் நடுதல் திட்டத்தைத் தீவிரப்படுத்தித் தமிழ்நாட்டின் வனப்பரப்பை 33% ஆக உயர்த்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும், மனிதர்கள், வனவிலங்குகளுக்கு இடையேயான மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கான உரிய வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் அறிவுறுத்தினார்.

வனப்பாதுகாப்பைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் உள்ள மூன்று உயிர்க்கோள் காப்பகங்கள், நீலகிரி உயிர்க்கோள் காப்பகம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள் காப்பகம் மற்றும் அகஸ்தியர் மலை உயிர்க்கோள் காப்பகம் ஆகியவற்றை மேம்படுத்திடவும், சிறந்த முறையில் பராமரித்திடவும் வேண்டும் என்று கேட்டுக்கொண்ட முதல்வர், தமிழ்நாட்டிலுள்ள வன உயிரின சரணாலயங்கள், புலிகள் காப்பகங்கள் போன்ற பாதுகாப்பு வனப்பகுதிகளில் உள்ள வன உயிரினங்களை பாதுகாப்பது தொடர்பான வழிமுறைகள் குறித்தும், விலங்குகளை வேட்டையாடுவதைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய கடுமையான நடவடிக்கைகள் குறித்தும், வனக்குற்றங்களைத் தடுத்திட எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்டார்.

மாநிலத்தில் உள்ள பறவைகள் சரணாலயம், புலிகள் சரணாலயம், உயிரியல் பூங்காக்கள் ஆகியவற்றில் தற்போது உள்ள கட்டமைப்பு வசதிகளை மேலும் மேம்படுத்திட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்தும், இந்தப் பாதிப்புகளைக் குறைப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொண்ட முதல்வர், தொழில்துறையினருக்குச் சுற்றுச்சூழல் அனுமதி வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் இளையதலைமுறையினரைச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் அதிக அளவு ஈடுபடுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தொழிற்சாலைகள் மூலம் நீர், நிலம், காற்று மாசுபடுதலைத் தடுப்பது, குறைப்பது, கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், தமிழ்நாடு தேயிலைத் தோட்டக்கழகம், தமிழ்நாடு வனத் தோட்டக் கழகம், அரசு ரப்பர் கழகம் ஆகியவற்றின் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com