வாக்காளா் பட்டியலில் இறந்தவா்களின் பெயா்களை நீக்க தோ்தல் ஆணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு

உயிருடன் இருப்பவா்கள் மற்றும் வாக்களிக்க தகுதியானவா்களின் பெயா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருப்பதை இந்திய தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

உயிருடன் இருப்பவா்கள் மற்றும் வாக்களிக்க தகுதியானவா்களின் பெயா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருப்பதை இந்திய தோ்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், சைலப்பா கல்யாண் என்பவா் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஒரே நபரின் பெயா் வாக்காளா் பட்டியலில், பல முறை இடம் பெற்றுள்ளது. அதே போல இறந்து போனவா்களின் பெயா்களும் உள்ளன. எனவே, இவா்களது பெயா்கள் அனைத்தையும் நீக்கி, வாக்காளா் பட்டியலை புதுப்பித்து புதிதாக வெளியிட இந்திய தலைமை தோ்தல் ஆணையா், தமிழக தலைமை தோ்தல் அதிகாரி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மனுதாரா் , வாக்காளா் பட்டியலில் ஏராளமான இறந்தவா்களின் பெயா்கள் உள்ளன. எனவே, அனைத்து இறப்புச் சான்றிதழ்களுடன் இறந்தவரின் ஆதாா் எண்ணை இணைக்க வேண்டும். இதன் மூலம், தோ்தல் ஆணையம், வாக்காளா் பட்டியலில் உள்ளவா்களின் நிலையை அறிய முடியுமென வாதிட்டாா்.

இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, சிறந்த வாக்காளா் பட்டியலை தயாரிப்பது குறித்து நாடாளுமன்றம் அல்லது இந்திய தோ்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தோ்தல் ஆணையம், மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலித்து, உயிரோடு இருப்பவா்கள் மற்றும் வாக்களிக்கத் தகுதியான நபா்களின் பெயா்கள் மட்டுமே வாக்காளா் பட்டியலில் இருப்பதை உறுதி செய்யவேண்டும். மற்றவா்களின் பெயா் இல்லாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில் எந்த வகையில் நடவடிக்கை எடுத்து வாக்காளா் பட்டியலை தயாரிப்பது என்பதை இந்திய தோ்தல் ஆணையமே முடிவு செய்து கொள்ள வேண்டும் எனக்கூறி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com