தமிழகத்தில் 539 கோயில்கள் புனரமைக்கப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு

தமிழகம் முழுவதும் 539 கோயில்களை புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.
சேலம் சுகவனேஸ்வரர் கோயிலை வெள்ளிக்கிழமை ஆய்வு செய்த இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

சேலம்: தமிழகம் முழுவதும் 539 கோயில்களை புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சேலம் மாநகரப் பகுதியில் பிரசித்தி பெற்ற சுகவனேஸ்வரர் கோயில் மற்றும் கோட்டை மாரியம்மன் கோயில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளை மாநில இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கட்டுமானப் பணிகள் மற்றும் கோயில் வளாகத்தை ஆய்வு செய்த அவர், திருப்பணிகளின் தற்போதைய நிலை குறித்தும் காலதாமதத்திற்கான காரணம் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். 

சுகவனேஸ்வரர் கோயில் நந்தவனத்தை முறையாக பராமரிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார். இதையடுத்து கடந்த 6 ஆண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வரும் கோட்டைமாரியம்மன் கோயிலை பார்வையிட்ட அமைச்சர் சேகர்பாபு, பணிகளை காலதாமதமின்றி முடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
 
இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியது: 

இந்து சமய அறநிலையத்துறையை பொருத்தவரை ரூ. 10 லட்சத்துக்கு வருமானம் உள்ள முதல்நிலை கோயில்களில் 539 கோயில்களை பட்டியலிட்டுள்ளோம். இந்த கோயில்களில் கும்பாபிஷேக பணிகள் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள கோவில்கள், பணி காலதாமதாகியுள்ள கோயில்கள், ஆகம விதிப்படி 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டிய கோயில்கள் என வகைப்படுத்தியுள்ளோம். 

திருப்பணிகள் நடைபெற்று வரும் கோயில்கள் மற்றும் திருப்பணிகள் நடைபெற வேண்டிய கோவில்கள் என அனைத்து கோவில்களுக்கும் மாஸ்டர் பிளான் எனப்படும் திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த அறிக்கையின் படி, ஏற்கெனவே உள்ள சன்னிதானங்கள் மாற்றம் செய்யப்படாமல் ஆகமவிதிப்படி திருப்பணிகள் நடைபெறும்.

கோயில் பரப்பளவு, கடைகள், திருத்தேர் இடங்கள், தெப்பகுள பராமரிப்பு என அனைத்து அம்சங்கள் குறித்தும் கலந்தாய்வு செய்து, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு கோயில்களை தூய்மை நிறைந்த பகுதியாக, நந்தவனங்கள் இருக்கும் பகுதியாக, கோவிலின் தல விருட்சங்கள் இருக்கும் வகையில் மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பணிகள் முழு வீச்சில் நடைபெறும். வாய்ப்புள்ள இடங்களில் கோயில்கள் வளாகத்தில் திருமண மண்டபங்கள் கட்டப்படும்.
 
கடந்த 50 ஆண்டுகளாக இந்து சமயநிலைய அறநிலையத் துறைக்கு சொந்தமான இடங்களின் வாடகை வருவதில் நிலுவை உள்ளது. இதனை ஒழுங்குப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம. இதேபோன்று ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதனை மீட்பதில் நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் கோயிலுக்கு சொந்தமான இடங்களை முழுமையாக வேலி அமைத்து அறிவிப்பு பலகை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். 
பொருளாதார மீட்பு நடவடிக்கையாக சட்ட திட்டங்களுக்கு உட்பட்ட குத்தகைக்கு விடுவது, வாடகைக்கு விடுவது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும். கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு எந்த வித லாப நோக்கமும் இல்லாமல், வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படும். அந்த வருவாய் கோயில்களுக்கு பயன்படுத்தப்படும். 

கடந்த 9 ஆண்டுகளாக கோயில்களுக்கு செலுத்தப்பட்டுள்ள தங்க நகைகள் உருக்கப்படாமல் உள்ளது. அந்த காணிக்கைகளை கோயிலுக்கு தேவைப்படின் எடுத்துக் கொண்டு, மீதமுள்ளவற்றை உருக்கி தங்க பிஸ்கெட்டுகளாக மாற்றி வைப்பு நிதியில் வைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.20 கோடி வட்டியாக கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இதனை உடனடியாக மேற்கொள்ள தொழில்நுட்பம் சார்ந்த குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
 
அறநிலையத்துறை கோயில்கள் தனியார் சொத்துக்கள் இல்லை. மன்னராட்சி காலத்தில் பல கோயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மக்களாட்சி வந்தவுடன் அந்த நடைமுறைகள் அரசின் வசம் மாற்றப்பட்டன. பல்வேறு மன்னர்கள், ஜமீன்தார்கள், செல்வந்தர்களால் கோயில்களுக்கு நன்கொடைகள் வழங்கப்பட்டுள்ளன.அப்படியிருக்கும்போது, தனியார் வசம் கோயில்களை ஒப்படைக்க முடியாது. அரசே நிர்வகிக்கும் கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க வாய்ப்பில்லை. நடைமுறையில் சாத்தியமில்லை.
 
அறநிலையத்துறையில் பல ஆண்டுகளாக உள்ள காலிப்பணியிடங்களை சட்டத்திற்குட்பட்டு வெளிப்படைத்தன்மையோடு விளம்பரப்படுத்தப்பட்டு, பணிகள் நிரப்பப்படும். 5 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றியுள்ள கோயில் பணியாளர்கள் பணி நிரந்தரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
 
கோயில் சொத்துக்களை பாதுகாக்கவும் விதிமீறல் நடைபெறாமல் இருக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வர் பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளார். இதுதொடர்பான அறிவிப்புகளை முதல்வர் வெளியிடுவார்.
 
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் தற்போது 30 யானைகள் கைவசம் உள்ளன. கடந்த காலங்களில் ஒரு மாதத்திற்கு ஒரு முறை அந்த யானைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. தற்போது அந்த நடைமுறையை மாற்றி 15 நாள்களுக்கு ஒரு முறை யானைகளை மருத்துவப் பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், அந்த யானைகள் நீராடுவதற்காக அந்தந்த கோயில் வளாகத்திலேயே குளங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. கோயில்களுக்கு யானைகள் தானமாக வழங்கினால் பயன்படுத்திக் கொள்ளலாம்.
 
அறநிலையத்துறையில் வட்ட அளவில் ஆய்வாளர் பணியிடங்களுக்கு அதிமுக்கியத் தேவைகளுக்கு வாகன வசதி செய்துத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
 
சிலை திருட்டு சம்பவங்களை பொருத்தவரை கடந்த சில தினங்களுக்கு முன்பு சில சிலைகள் மீட்கப்பட்டன. ஏற்கெனவே திருட்டுப் போன சிலைகளில் வெளிநாடுகளில் உள்ளதை கண்டறிந்துள்ளோம். அதை மீட்கவும், இதுதொடர்பான வழக்குகளை விரைவுபடுத்தவும், தொடர்புடைய குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

ஆய்வின் போது, மாநில சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளரும் வடக்குத் தொகுதி எம்எல்ஏ ஆர். ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com