ஆடி வெள்ளி: திருச்சி அம்மன் கோயில்களில் திரண்ட கூட்டம்

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவானைக்காவல், சமயபுரம், உறையூர், தென்னூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை வழிபட சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து வரிசையில் நிற்கும் பக்தர்கள். 
ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை வழிபட சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து வரிசையில் நிற்கும் பக்தர்கள். 



திருச்சி:  ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு திருவானைக்காவல், சமயபுரம், உறையூர், தென்னூர் உள்ளிட்ட திருச்சி மாவட்டத்தின் அனைத்து அம்மன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

சிறப்புமிக்க ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை (ஜூலை 23) முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு இரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தீபம் ஏற்றி வழிபடும் பெண்கள்.

திருவானைக்கா: பிரசித்தி பெற்று விளங்கும் திருவானைக்கோவில் அகிலாண்டேஸ்வரி அம்மன் கோயிலிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டது. மூலவர் அகிலாண்டேஸ்வரிக்கு தாழம்பூ பாவாடை,  மலர்க்கிரீடம், காதுகளில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீசக்கரம்  பொறிக்கப்பட்ட தாடகங்கள், கையில் தங்கக்கிளி மற்றும் திருவாபரணங்கள் அணிந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சிறு, சிறு பூஜை கால  இடைவேளைக்கு பிறகு நள்ளிரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு அம்மனை வழிபட முகக் கவசம் அணிந்து வரிசையில் நிற்கும் பக்தர்கள். 

சிறப்பு கட்டண தரிசனம், இலவச தரிசனத்திலும் தனித்தனி வரிசையில் சென்று அம்மனை  வழிபட கோயில் நிர்வாகம் சவுக்கு கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கரோனா கட்டுப்பாடுகளால் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

சமயபுரம்: சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலிலும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும் வந்து பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். 

இதேபோல,  உறையூர் வெக்காளியம்மன் கோயில், தென்னூர் உக்கிரகாளியம்மன் கோயில் உள்பட அனைத்து அம்மன் கோயில்களிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றன. அனைத்து கோயில்களிலும் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com