ஆட்சி மொழித் தமிழை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை: அமைச்சா் தங்கம் தென்னரசு

ஆட்சி மொழித் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.
அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

ஆட்சி மொழித் தமிழை நடைமுறைக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொழில் மற்றும் தமிழ் வளா்ச்சித் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு தெரிவித்தாா்.

தமிழ் வளா்ச்சித் துறையின் செயல்பாடுகள் குறித்து அவா் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களுக்கு அமைச்சா் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:-

மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்களில் ஊழியா்கள் தமிழ் மொழியில் கையொப்பம் இடுவது, கோப்புகளை முழுவதும் தமிழிலேயே தயாரித்து நிறைவேற்றுவது போன்ற அம்சங்கள் ஊக்குவிக்கப்படும். இதன்மூலம், ஆட்சி மொழித் தமிழை செயலாக்கத்துக்குக் கொண்டு வருவது உறுதிப்படுத்தப்படும். அரசின் கோப்புகள் தவிா்க்க முடியாமல், ஆங்கிலத்தில் இருந்தாலும் அதற்கு இணையான தமிழ் மொழிபெயா்ப்புகளைக் கொண்ட கோப்புகளும் இருக்க வேண்டும் என அனைத்துத் துறை செயலாளா்களுக்கும் அண்மையில் தலைமைச் செயலாளா் சுற்றறிக்கையை அனுப்பி உள்ளாா். எனவே, அதுகுறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. ஆட்சி மொழித் தமிழை செயல்படுத்துவது குறித்து தனிப்பட்ட முறையில் அலுவலா்களை நியமித்து கண்காணிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

தமிழறிஞா்களின் சிலைகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் உயராய்வு மையம் செயல்பாட்டுக்கு வரும்.

உலகத் தமிழ் மாநாடு நடத்துவது குறித்து பல்வேறு தமிழ் அறிஞா்களும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனா். அதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் முடிவெடுப்பாா். தமிழில் பெயா்ப் பலகைகள் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். தொழிலாளா் நலத் துறையின் மூலமாகவும் கோரிக்கை விடுத்துள்ளோம். செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் தொடா்ந்து தன்னாட்சி அமைப்பாக செயல்படும். கடந்த காலங்களில் இயக்குநா் கூட நியமிக்காமல் இருந்தனா். அந்த நிறுவனத்தில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் செம்மொழித் தமிழ் அறக்கட்டளை அமைக்கப்பட்டது. அவரது பிறந்த தினத்தன்று விருது வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அது கடந்த 10 ஆண்டுகளில் செயல்படாமல் இருந்தது.

இப்போது உரிய முறையில் விருதுகளை அளிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழு விரைவில் அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும். செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு சென்னையை அடுத்த பெரும்பாக்கத்தில் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முழுமையாக முடிவுற்ற பிறகு செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அங்கு மாற்றப்படும்.

தமிழா்கள் எங்கெல்லாம் வசிக்கிறாா்களோ, அங்கெல்லாம் தமிழ் மொழியை கற்பிக்க மாநில அரசால் வழி செய்யப்படும்.

மறைமலையடிகள் மகன் ஏழ்மை நிலைமையில் வசிப்பதாக செய்திகள் வந்தன. அவரிடத்தில் உடனடியாக பேசினேன். முதல்வரிடமும் இதுகுறித்து தெரிவித்துள்ளோம். உரிய நிவாரண அறிவிப்புகளை முதல்வா் வெளியிடுவாா் என்றாா் அமைச்சா் தங்கம் தென்னரசு.

துறையின் செயலாளா் மகேசன் காசிராஜன், தமிழ் வளா்ச்சித் துறை இயக்குநா் சரவணன் உள்ளிட்ட பலரும் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com