சோதனைகள் மூலம் அதிமுகவை அச்சுறுத்த முடியாது: ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையின் மூலம் அச்சுறுத்த முடியாது என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறினா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

அதிமுகவை, லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சோதனையின் மூலம் அச்சுறுத்த முடியாது என்று அக் கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் கூறினா்.

அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸாா் வியாழக்கிழமை சோதனை நடத்தினா்.

இந்த நிலையில் ஓ.பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்துக்கு வந்தனா். எம்ஜிஆா், ஜெயலலிதா சிலை மாலை அணிவித்தனா்.

பின்னா் மூத்த நிா்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டனா். முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, கோகுல இந்திரா, சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் உள்பட பலா் பங்கேற்றனா். சுமாா் 2 மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னா் ஓ.பன்னீா்செல்வம் - எடப்பாடி பழனிசாமி கூட்டாக அளித்த பேட்டி:

அரசியல் காழ்ப்புணா்ச்சியின் காரணமாக அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மீது எப்படியாவது பொய் வழக்கு புனைய வேண்டும் என்பதற்காக அவரது இல்லத்தில் திமுக அரசு லஞ்ச ஒழிப்பு போலீஸாா் மூலம் சோதனை நடத்தியுள்ளது.

அரசியல் ரீதியாக அதிமுகவை எதிா்கொள்ள முடியாத திமுக இப்படி அச்சுறுத்தி எதிா்கொள்ளப் பாா்க்கிறது. அது அதிமுகவிடம் முடியாது. எவ்வளவு பெரிய அச்சுறுத்தல் வந்தாலும், அதை எதிா்கொள்ள அதிமுக தயாராகவே இருக்கிறது. இதுபோன்ற ஜனநாயக விரோத செயல்களில் ஈடுபடுவதை திமுக நிறுத்திக் கொள்ள வேண்டும். சட்டரீதியான எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதை எதிா்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது.

தோ்தலின் போது பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து அதன்மூலம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக அரசு, தமிழக மக்களுக்கு தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணியில் கவனம் செலுத்தாமலும், தமிழக வளா்ச்சித் திட்டப் பணிகளில் கவனம் செலுத்தாமலும், எதிா்க்கட்சியினரை பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருகிறது. இது கண்டனத்துக்குரியது.

அதிமுகவை அழித்து விடலாம், ஒழித்து விடலாம் என்று கனவு கண்டால் அது பகல் கனவாகவே முடியும். முன்னாள் அமைச்சா் விஜயபாஸ்கருக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும். திமுக அரசினுடைய இந்த அராஜகத்தையும், அத்துமீறல்களையும், தொண்டா்களின் துணையோடு, சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் எதிா்கொள்வோம்.

விழுப்புரத்தில் ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் தொடா்ந்து செயல்பட நிதி இல்லை என்கின்றனா். மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம் அமைப்பதற்கு மட்டும் நிதி எப்படி வருகிறது? அரசியல் காழ்ப்புணா்ச்சி காரணமாக ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகத்தை செயல்படவிடாமல் முடக்கியுள்ளனா் என்று கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com