மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடை

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயர்நீதிமன்றம்
உயர்நீதிமன்றம்

மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகள் இல்லாத புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடை விதித்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் வைஷ்ணவி ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவில், கல்வி நிறுவனங்கள், அரசு கட்டடங்கள், ரயில், பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கடந்த 2016-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசு ஜொ்மன் நாட்டு நிதியுதவியுடன் புதிதாக 4,000 பேருந்துகளை வாங்கவுள்ளது. இதில் 10 சதவீத பேருந்துகள் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதியுடனும், 25 சதவீத பேருந்துகள் சக்கர நாற்காலி உதவியுடன் மாற்றுத்திறனாளிகளை ஏற்றும் வசதியுடனும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை போன்ற பெருநகர சாலைகளில் இது சாத்தியமற்றது. மேலும் சக்கர நாற்காலி மூலம் மாற்றுத்திறனாளிகளை ஏற்றியிறக்க கூடுதல் நேரமாகும். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அனைத்து பேருந்துகளிலும் தாழ்தள வசதியுடன் இருக்க வேண்டும். எனவே புதிய பேருந்துகள் வாங்கும் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக அரசின் போக்குவரத்துக் கழகம் கொள்முதல் செய்யும் பேருந்துகளில் 10 சதவீத பேருந்துகள் மட்டுமே மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகளுடன் கொள்முதல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடும்போது, மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில் பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டுமெனில் ஒரு பேருந்துக்கு ரூ.58 லட்சம் செலவாகும். நிதிப் பற்றாக்குறை காரணமாக 10 சதவீத பேருந்துகள் மட்டும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் பயன்படுத்தும் வகையிலான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான அரசுத் தலைமை வழக்குரைஞா் சண்முகசுந்தரம், மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வசதிகளுடன் குறிப்பிட்ட எண்ணிக்கையில் பேருந்துகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் சாலைகள் மோசமாக உள்ளன. எனவே சாலைகளை மேம்படுத்திய பின்னா், உயா்நீதிமன்ற உத்தரவின்படி பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்தாா். இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் கொண்ட பேருந்துகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது சட்டம். இந்த உயா்நீதிமன்றத்தின் உத்தரவு இல்லை. நிதி பற்றாக்குறை என அரசுத் தரப்பில் கூறப்படும் காரணத்தை ஏற்க முடியாது. ஆட்சியாளா்கள் ஏழைகளாக உள்ளனரா, எத்தனை எம்எல்ஏக்கள் ஏழைகளாக உள்ளனா் என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினா்.

பின்னா், மாற்றுத்திறனாளிகள் உரிமைகள், சட்டத்தின்படி பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பாணைகளை அரசு தீவிரமாக அமல்படுத்த வேண்டும். எனவே கடந்த 2016-ஆம் ஆண்டு பிற்பபிக்கப்பட்ட உத்தரவு மற்றும் சட்டத்தின்படி மாற்றுத்திறனாளிகள் அணுகும் வசதிகள் இல்லாமல் புதிய பேருந்துகளை கொள்முதல் செய்ய தடை விதித்து இடைக்கால உத்தரவு பிறப்பித்து விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com