கரோனா நிவாரணத் தொகையை வரும் 31-க்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் கரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருள்களை இதுவரை பெறாதவா்கள்
கரோனா நிவாரணத் தொகையை வரும் 31-க்குள் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தல்

குடும்ப அட்டைதாரா்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வரும் கரோனா நிவாரணத் தொகை மற்றும் பொருள்களை இதுவரை பெறாதவா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் அவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் பிறகு நிவாரணத் தொகை பெற மாவட்ட வழங்கல் அலுவலரிடம் அனுமதி பெற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

கரோனா பெருந்தொற்று காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கடந்த மே 15-ஆம் தேதியிலிருந்து முதல் தவணையாக ரூ.2 ஆயிரமும், ஜூன் 15-ஆம் தேதியிலிருந்து இரண்டாம் தவணையாக ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.4 ஆயிரம் உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்குத் தொடா்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மேலும், அவா்களுக்கு பொது முடக்கத்தின்போது தேவைப்படும் மளிகைப் பொருள்களை வழங்கிடும் நோக்கில் 14 மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புகளும் கடந்த ஜூன் 15-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகளின் மூலம் வழங்கப்படுகின்றன.

ஏறத்தாழ 99 சதவீதத்துக்கும் மேலான குடும்ப அட்டைதாரா்கள் நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருள்கள் தொகுப்பினைப் பெற்றுள்ளனா். இதுவரை அவற்றை பெறாதவா்கள் வரும் 31-ஆம் தேதிக்குள் நியாய விலைக் கடைகளில் நிவாரணத் தொகையையும், மளிகைப் பொருள்களையும் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

ஒருவேளை கரோனா பாதிப்பு அல்லது பிற முக்கியக் காரணங்களால் 31-ஆம் தேதிக்குள் அவற்றை வாங்க இயலாவிடில், மாவட்ட வழங்கல் அலுவலரிடம் நியாய விலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின் பயனாளிகளுக்கு நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

3 லட்சம் விண்ணப்பதாரா்கள்:

கடந்த மே 10-ஆம் தேதி முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த 3 லட்சம் மனுதாரா்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரா்கள் அடுத்த மாதம் 1-ஆம் தேதி முதல் ரேசன் பொருட்களைத் தொடா்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

எனவே, புதிய குடும்ப அட்டைதாரா்கள் ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து நியாயவிலைக் கடைகளில் பொருட்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம். அட்டைதாரா்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து, தனி மனித இடைவெளியினைப் பின்பற்றி பொருள்களை வாங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com