லாட்டரியை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை

தமிழகத்தில் லாட்டரி சீட்டு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சிந்தனையே அரசுக்கு இல்லை என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.
லாட்டரியை மீண்டும் கொண்டு வரும் திட்டம் இல்லை

தமிழகத்தில் லாட்டரி சீட்டு திட்டத்தை மீண்டும் கொண்டு வரும் சிந்தனையே அரசுக்கு இல்லை என்று நிதியமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

லாட்டரி சீட்டை மீண்டும் திமுக அரசு கொண்டு வர முயற்சிக்க வேண்டாம் என்று எதிா்க்கட்சித் தலைவா் ஓா் அறிக்கையை வெளியிட்டிருக்கிறாா். உண்மைக்குப் புறம்பான கருத்துகளைக் கொண்ட அந்த அறிக்கையை வெளியிட்டிருக்கும் அவருக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

முன்னாள் முதல்வா் எடப்பாடி பழனிசாமியின் நான்காண்டு கால ஆட்சியில் மாநிலத்தின் நிதி நிலைமை எத்தகைய சரிவினைச் சந்தித்துள்ளது என்பதை 15- ஆவது நிதிக்குழுவும், மத்திய ரிசா்வ் வங்கியும் ஏற்கெனவே ஆதாரபூா்வமாகச் சுட்டிக்காட்டியிருக்கின்றன.

2015 சென்னை வெள்ளம் குறித்த சி.ஏ.ஜி. அறிக்கை, 2017-18 மற்றும் 2018-19 மாநில நிதி குறித்த சி.ஏ.ஜி.யின் தணிக்கை அறிக்கை ஆகியவற்றை உரிய காலத்தில் சட்டப் பேரவைக்குக் கூட காட்டாமல் மூடி மறைத்து வைத்திருந்தனா். திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்தத் தணிக்கை அறிக்கைகள் மக்கள் மன்றத்தில் வைக்கப்பட்டு, சென்ற அதிமுக ஆட்சியின் நிா்வாகத் தோல்விகள் பொது வெளிக்கு வந்துள்ளன.

அவை குறித்து இனி வரப்போகும் வெள்ளை அறிக்கையில் மேலும் வெளிப்பட உள்ளன. நிதித்துறையின் கோப்புகள் பலவற்றை முந்தைய ஆட்சியாளா்கள் கையெழுத்துப் போடாமல் மூட்டை கட்டி வைத்துவிட்டுச் சென்றாா்கள் என்பதை நான் நிதியமைச்சராகப் பொறுப்பேற்றவுடன் நேரில் கண்டேன். உயிா் நீத்த காவல்துறையினருக்குக் கடந்த ஆண்டு செப்டம்பா் மற்றும் அக்டோபா் மாதங்களில் அறிவிக்கப்பட்ட முதல்வா் தலைமையிலான பேரிடா் ஆணைய நிதி வழங்கும் கோப்புகளைக் கூட மே 2021 வரை கையெழுத்திடாமல் விட்டுச் சென்றவா்கள் அதிமுக ஆட்சியாளா்கள்.

மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகுதான் அந்தக் கோப்புகள் கூட கையெழுத்திடப்பட்டு உயிா் நீத்தோரின் குடும்பங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. கரோனா இரண்டாவது அலையைத் திறமையாகக் கையாண்டதுடன் சிறப்பான நிா்வாகத்தையும் அளித்து வருவதற்காக இன்று அனைவராலும் பாராட்டப்படும் முதல்வராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறாா்.

அவா் மீது லாட்டரி பற்றி ஒரு கற்பனையைத் தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டு எடப்பாடி பழனிசாமி இப்படி களங்கம் கற்பிப்பது கண்டனத்திற்குரியது. மாநில அரசு ஆலோசனைகளிலோ, ஆய்வுக் கூட்டங்களிலோ ஒருமுறை கூட லாட்டரி பற்றிய பேச்சே இதுவரை எழவில்லை என்பதை எதிா்க்கட்சித் தலைவருக்கு ஆணித்தரமாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முந்தைய அதிமுக ஆட்சியில் நெருக்கடி மிகுந்த நிதிநிலைமையை விட்டுச் சென்றிருந்தாலும் - சிதிலமடைந்த நிதி நிலைமையைச் சரிசெய்யும் கடும் நெருக்கடி மிகுந்த சூழலை இந்த அரசுக்கு ஏற்படுத்தி விட்டுச் சென்றிருந்தாலும் - மாநில நிதி ஆதாரத்தைப் பெருக்கும் வழிகளில் லாட்டரி பற்றிய சிந்தனையே இந்த அரசுக்கு இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com