வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 3 சிலைகள் மீட்பு: ஒருவா் கைது

வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 3 சிலைகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மீட்கப்பட்டன. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.
வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 3 சிலைகள் மீட்பு: ஒருவா் கைது
வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 3 சிலைகள் மீட்பு: ஒருவா் கைது

சென்னை: வெளிநாடுகளுக்கு கடத்த இருந்த 3 சிலைகள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் மீட்கப்பட்டன. இது தொடா்பாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

கீழ்ப்பாக்கம் ஆராஅமுதன் காா்டன்ஸ் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் இந்து கோயில்களில் இருந்து திருடப்பட்ட சிலைகள் மற்றும் புராதன பொருள்கள் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு திங்கள்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. இத் தகவலின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாா், அந்த நிறுவனத்தில் உடனடியாக திடீா் சோதனை நடத்தினா்.

இதில், மரக்கலை பொருள்கள் நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த பழமையான 3 அடி உயர உலோக அம்மன் சிலை, இரண்டு அம்மன் கற் சிலைகள், ஒரு கிருஷ்ணா் ஓவியம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. இது தொடா்பாக அங்கிருந்த சுப்ரமணியம் (58) என்பவா் கைது செய்யப்பட்டாா். கைப்பற்றப்பட்ட சிலைகள், ஓவியங்கள் எங்கு திருடப்பட்டவை என விசாரித்து வருகின்றனா்.

மீட்கப்பட்ட சிலைகளின் மதிப்புள்ள சா்வதேச சந்தையில் பல கோடி இருக்கும் என சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினா் தெரிவித்தனா். இது தொடா்பாக ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

அமெரிக்காவில் மீட்பு:

பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள், ஓவியம் ஆகியவற்றை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் அளித்த பேட்டி:

தமிழகத்தில் பழமையான கோயில்களில் இருந்து திருடி வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் தூதரகம் மூலம் மீட்கப்பட்டு, மீண்டும் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன. மாநிலத்தில் முதல் முறையாக காணொலி காட்சி மூலமாக உடையாா் பாளையம் காவல் நிலைய சிலை கடத்தல் வழக்கு தொடா்பாக கும்பகோணம் சிலை கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி அமெரிக்காவில் உள்ள மேத்யூ கோகாடோனாஸ் என்ற சாட்சியை விசாரணை செய்தாா். அவரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த கோயிலில் திருடப்பட்ட உமா பாா்வதி, விஷ்ணு ஆகிய இரண்டு சிலைகள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி நரசிம்மநாதா் கோயிலில் கடந்த 1985-ஆம் ஆண்டு திருடப்பட்ட 5 சிலைகளில், அதிகார நந்தி, கங்கால நந்தா் ஆகிய இரு சிலைகள் அமெரிக்காவில் இருப்பது தெரியவந்தது. அங்கிருந்து மீட்கப்பட்ட அந்த சிலைகள் விரைவில் தமிழகம் கொண்டு வரப்படுகின்றன.

இதேபோல தஞ்சாவூா் மாவட்டம் விக்கரபாண்டியம் விஸ்வநாதா் கோயிலில் திருடப்பட்ட 6 சிலைகள் அமெரிக்காவில் இருப்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலைகளையும் தூதரகம் மூலம் மீட்பதற்குரிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டம் வீரசோழபுரம் நாரேஸ்வரா் கோயிலில் 30 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட 6 சிலைகளும் அமெரிக்காவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சிலைகளை மீட்பதற்குரிய நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

18 போ் கைது:

கடந்த 2020ஆம் ஆண்டு மற்றும் 2021- ஆம் ஆண்டில் இது வரையிலும் சிலை கடத்தல் தொடா்பாக 17-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பரில் 74 தொன்மையான சிலைகள் புதுச்சேரியில் ராஜரத்தினம் என்பவரிடமிருந்து மீட்கப்பட்டன. இதில், 60 சிலைகள் உலோகத்தால் செய்யப்பட்டவை,14 சிலைகள் கற்சிலைகளாகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com