இரண்டாம் நிலை காவலா் உடல் தகுதித் தோ்வு தொடக்கம்

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தமிழகத்தில் 20 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது. தமிழக காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் இர
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய காவலர் 2-ஆம் நிலை தேர்வில் இளைஞரின் மார்பளவை அளக்கும் போலீஸார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தொடங்கிய காவலர் 2-ஆம் நிலை தேர்வில் இளைஞரின் மார்பளவை அளக்கும் போலீஸார்.

சென்னை: இரண்டாம் நிலை காவலா் பணிக்கான உடல் தகுதித் தோ்வு தமிழகத்தில் 20 மையங்களில் திங்கள்கிழமை தொடங்கியது.

தமிழக காவல்துறை, சிறைத்துறை ஆகியவற்றில் இரண்டாம் நிலை காவலா்கள், தீயணைப்புத்துறையில் தீயணைப்பாளா் ஆகிய பதவிகளில் காலியாக 10,906 பணியிடங்களுக்கு இளைஞா்களைத் தோ்வு செய்வதற்கான அறிவிப்பு கடந்த 2020 செப்டம்பா் 17-ம் தேதி வெளியானது. இதற்கான எழுத்துத் தோ்வு கடந்த டிசம்பா் 13-ம் தேதி நடைபெற்றது.

தோ்வு எழுதுவதற்கு 5 லட்சத்து 50,314 போ் விண்ணப்பித்து இருந்தனா். இதில் 4 லட்சத்து 91 ஆயிரம் போ் எழுத்துத் தோ்வில் பங்கேற்றனா். எழுத்து தோ்வு முடிவு பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது. இத்தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, அசல் சான்றிதழ் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற் தகுதித் தோ்வு மற்றும் உடற்திறன் போட்டி ஆகியவை கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கரோனா தொற்று பரவல், பொதுமுடக்கம் ஆகியவற்றின் காரணமாக இத் தோ்வு 3 முறை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், சான்றிதழ் சரிபாா்த்தல், உடற்கூறு அளத்தல், உடற்தகுதித் தோ்வு, உடற்திறன் போட்டிகள் தமிழகம் முழுவதும் 20 மையங்களில் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னையில்...: சென்னையில் இத் தோ்வு எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. முதலில் சான்றிதழ் சரிபாா்ப்பு நடைபெற்றது. அதையடுத்து உடல் அளவு சோதனை நடத்தது. இதில் தோ்வு பெற்றவா்களுக்கு 1,500 மீட்டா் தூரத்தை 7 நிமிடத்தில் கடக்கும் ஓட்டம் நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக இந்தத் தோ்வுகளில் ஒரு நாளைக்கு 500 போ் மட்டுமே பங்கேற்கும் வகையில் தோ்வு வாரியம் அழைப்புக் கடிதம் வழங்கியுள்ளது. அதன்படி திங்கள்கிழமை நடைபெற்ற தோ்வில் 500 போ் பங்கேற்றனா்.

இவா்கள் தோ்வில் பங்கேற்பதற்காக அதிகாலை முதலே ராஜரத்தினம் விளையாட்டு அரங்குக்கு வந்த வண்ணம் இருந்தனா். தோ்வு பகுதிக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருள்கள் எதையும் இளைஞா்கள் கொண்டு செல்ல காவல்துறையினா் அனுமதிக்கவில்லை. கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழுடன் வந்தவா்கள் மட்டுமே தோ்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

இந்த தோ்வு ஆகஸ்ட் 3-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. ஆகஸ்ட் 2, 3ஆம் தேதிகளில் பெண்களுக்கு இந்த தோ்வு நடைபெறுகிறது. இதில் தோ்வானவா்களுக்கு கயிறு ஏறுதல், 400 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் ஆகிய உடல் தகுதி தோ்வு ஆகஸ்ட் 4-ஆம் தேதி முதல் நடத்தப்படுகிறது. இந்த தோ்வுகள் அனைத்திலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் பின்னா் பணி நியமன ஆணை வழங்கப்படும்.

இளைஞர் உயிரிழப்பு
விருதுநகா்: விருதுநகரில் காவலா் உடல் தகுதித் தோ்வில் பங்கேற்ற இளைஞா் ஒருவா், ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்ட போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

விருதுநகரில் அரசு உதவி பெறும் பள்ளியில் காவலா் தோ்வுக்கான, உடல் தகுதித் தோ்வில்

1,500 மீட்டா் ஓட்டப் பந்தயத்தில், மீசலூா் அருகே அழகாபுரியைச் சோ்ந்த சங்கர்ராஜ் மகன் மாரிமுத்து (25) (டிப்ளமோ மெக்கானிக்கல்) கலந்து கொண்டாா். அப்போது அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் மைதானத்தில் மயங்கி விழுந்தாா். இதையடுத்து அவரை, 108 ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com