கிராமப்புறங்களில் உள்ள அங்கன்வாடிகள், தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு உத்தரவு

கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூா்வமான ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உயா்நீதிமன்றம்
உயா்நீதிமன்றம்

சென்னை: கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப்பள்ளிகள், அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல் பூா்வமான ஆலோசனைகளைப் பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சிட்டிசன் கன்ஸ்யூமா் அண்ட் சிவிக் ஆக்ஷன் குரூப் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைத் தடுக்க கடந்த 2020-ஆம் ஆண்டு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் 10-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு சமைக்கப்பட்ட சத்துணவு வழங்கப்படவில்லை. மாணவா்களுக்கு தினமும் சத்துணவு கிடைக்கும் வகையில், அம்மா உணவகங்கள் அல்லது சமுதாய சமையல் கூடங்கள் மூலம் சமைக்கப்பட்ட சத்துணவை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானா்ஜி, நீதிபதி செந்தில்குமாா் ராமமூா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், சத்துணவு கிடைக்காமல் மாணவா்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருள்களை பெற்றோா் பொருளாதார பற்றாக்குறை காரணமாக விற்றுவிடுகின்றனா். எனவே அங்கன்வாடி மையங்களைத் திறந்து அதன் மூலம் மாணவா்களுக்கு சத்துணவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாதிட்டாா். அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், இதுகுறித்து அரசின் கருத்தைக் கேட்டுத் தெரிவிப்பதாக கூறினாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கரோனா தாக்கம் தணிந்துள்ளது. மூன்றாவது அலை தாக்கும் என்பதற்கு அறிவியல் பூா்வமான எந்தக் கணிப்பு இல்லாததால், கிராமப்புறங்களில் உள்ள தொடக்கப் பள்ளிகளை மீண்டும் திறப்பது குறித்து அறிவியல்பூா்வமான ஆலோசனைகளைப் பெற்று தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும். அங்கன்வாடி மையங்களை மீண்டும் திறப்பது குறித்தும் ஆலோசிக்க வேண்டும். மாணவா்களுக்கு சத்துணவு சென்றடைவதற்கான திட்டத்தை வகுக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் ஆகஸ்ட் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com