ஆதரவின்றி சுற்றித்திரிந்த கர்ப்பிணிப் பெண்: சொந்த ஊர் செல்ல உதவிய காவல் துறை

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே முழு பொதுமுடக்கத்தில் கையில் குழந்தையுடன் வீதிகளில் சுற்றித்திரிந்த பெண்ணை அவரது சொந்த ஊருக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். 
தேவூரில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
தேவூரில் ஆதரவின்றி சுற்றித்திரிந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், தேவூர் அருகே முழு பொதுமுடக்கத்தில் கையில் குழந்தையுடன் வீதிகளில் சுற்றித்திரிந்த பெண்ணை அவரது சொந்த ஊருக்கு காவல்துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன்  கார் மூலம் புதன்கிழமை  அனுப்பி வைத்தனர். 

கரோனா தொற்று பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கையையொட்டி தமிழக அரசு முழு பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பொதுமக்கள் அவரவர்கள் வீட்டிலேயே உள்ளடங்கி உள்ளனர்.

இந்நிலையில் தேவூர் சந்தைப்பேட்டை பகுதியில் மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் கையில் குழந்தையுடன் சுற்றித்திரிந்த பெண் மீது சந்தேகமடைந்து அப்பகுதி மக்கள் தேவூர் காவல் துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதனையடுத்து காவலர்கள் விசாரணையில்  அப்பெண்ணின் பெயர் கௌசல்யா (22) என்பதும் 9 மாத கர்ப்பிணியாக உள்ளதும் தெரிய வந்துள்ளது. அவருக்கு  சித்ரா (3) வயது பெண் குழந்தையும்,  வளர்ச்சியில்லாத தம்பி  ஆகாஷ் (16) உடன் இருந்துள்ளனர்.

கௌசல்யாவின் தாய், தந்தை இறந்து விட்டதாகவும், அவரது சொந்த ஊர் விருத்தாசலம் ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது என்று கூறியுள்ளார். அவரது பெற்றோர்கள் இறந்து விட்டதாகவும், அவருக்கும்  நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே உள்ள வேலகவுண்டம்பட்டி பகுதியைச் சேர்ந்த மூர்த்தி மகன் சேகர் என்பவருக்கும் திருமணம் நடைபெற்று அவருடன் வசித்து வந்ததாகவும் கூறியுள்ளார்.  

கௌசல்யாவின் தம்பி ஆகாஷ் திருப்பூரில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.  உறவினர் அவரது தம்பியை பிச்சையெடுக்க வைத்ததால் அக்காவை தேடி திருச்செங்கோடு வந்துள்ளார். அதனையடுத்து கணவன், மனைவி இருவருக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டதில் கணவர் அடித்து துரத்தி விட்டதாகவும் கூறியுள்ளார்.

அப்பகுதியில் இருந்து நிறைமாத கர்ப்பிணியான கௌசல்யா, அவரது 3 வயது பெண்குழந்தை, தம்பியுடன் ஊர் ஊராக சுற்றி தரிந்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.  கடந்த சில தினங்களுக்கு முன்பு தேவூர் வந்து சந்தைப்பேட்டை பகுதியில் சாலையோரம் தங்கியிருந்ததாகவும் கூறியுள்ளார். 

தற்போது எனது உறவினர்கள் உள்ள விருத்தாசலத்திற்கு செல்ல என்னிடம் பணமும், பேருந்து வசதிகள் இல்லாததால் ஊருக்கு செல்ல இயலவில்லையென தெரிவித்துள்ளார்.  

இதனையடுத்து தேவூர் காவல்துறையினர் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கார் மூலம் அப்பெண்ணை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.  காவல்துறையினரின் உதவியை பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com