தமிழகத்தில் 17 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது: ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். 
சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம்.
சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட சுகாதாரத்துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன். உடன் மாவட்ட ஆட்சியர் செ. கார்மேகம்.

சேலம்: தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரோனோத் தொற்றின் தாக்கம் குறைந்துள்ளாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பெருந்தொற்று காலத்தில் நோயாளிகளிடம் தனியார் மருத்துவமனைகள் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
 
தமிழக சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன் சேலம் அரசு மருத்துவமனையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். நோயாளிகள் சிகிச்சைப் பிரிவு, புதிதாக வரும் நோய்த் தொற்றாளர்கள் அனுமதிக்கும் நடைமுறைகள், ஆக்சிஜன் நிலவரம் உள்ளிட்டவை குறித்து நேரில் பார்வையிட்ட அவர், மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகளுக்கு எவ்வித தாமதமுமின்றி விரைவாக சிகிச்சையளிக்க மருத்துவர்களுக்கு உத்தரவிட்டார்.
 
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
 
தமிழகம் முழுவதும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம். காய்ச்சல் முகாம்கள் நடத்துவது, நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள இடங்களில் கரோனா பரிசோதனை மேற்கொள்வது, புதிதாக தொற்று பரவாமல் இருப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை அரசு தீவிரமாக எடுத்து வருகிறது.

முழு பொது முடக்கம் மற்றும் அரசு எடுத்து வரும் நடவடிக்கை காரணமாக, தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரோனாத் தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளது.11 மாவட்டங்களில் இன்னும் தொற்றின் தாக்கம் குறையவில்லை. அந்த மாவட்டங்களில் தொற்றுப் பரவலை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். பெரும்பாலும் உச்ச நிலைக்கு சென்ற பிறகே தொற்று பாதிப்பு குறையத் தொடங்கும் என மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். அதனை கண்காணித்து வருகிறோம்.மிக விரைவில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்றின் தாக்கம் குறையத் தொடங்கும் என எதிர்பார்க்கிறோம்.
 
சேலம் மாவட்டத்தில் சேலம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளதுடன், சேலம் உருக்காலை வளாகத்தில் 500 படுக்கைகள் ஆக்சிஜன் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மேலும் 500 படுக்கைகளை ஆக்சிஜன் வசதியுடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஆக்சிஜன் படுக்கை தட்டுப்பாடு முழுமையாக குறைந்துள்ளது.
 
பொதுமக்கள் நோய் அறிகுறிகள் வந்தவுடன் காலதாமதமின்றி கரோனா பரிசோதனை செய்து கொண்டால் சிகிச்சை பெற்று 10 நாளில் குணமாக முடியும். மூச்சுத் திணறல் வரை நோய் பாதிப்பை அதிகரித்து கொண்ட பின்னரே சிலர் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதனால்தான் உயிரிழப்பு நேரிட்டு விடுகிறது. பொதுமக்கள் நோய் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.  நோய் பாதிப்பு குறையத் தொடங்கி விட்டதால், முகக்கவசம் அணிவதை கைவிட்டு விடக்கூடாது. தொடர்ந்து முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
 
ஜப்பானில் தற்போது கரோனா நான்காவது அலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த அலை ஏற்பட்டால் எந்த வித நடவடிக்கை எடுக்க வேண்டும், மருத்துவ கட்டமைப்புகளை எவ்வாறு உருவாக்க வேண்டும் என்பதை முடிவு செய்வதற்காக 13 பேர் கொண்ட உயர்மட்ட சிறப்புக்குழுவை முதல்வர் உருவாக்கியுள்ளார். அக்குழுவினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து தேவையான பரிந்துரைகளை அளிப்பார்கள்.
 
தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏதும் இல்லை. கூடுதலாக இருப்பு வைக்கும் அளவிற்கு ஆக்சிஜன் உற்பத்தி உள்ளது. முதலாவது அலையின்போது, நமக்கு 280 மெட்ரிக் டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது.கடந்த பிப்ரவரி மாதம் 60 மெட்ரிக் டன் தேவைப்பட்டது. ஏப்ரல் கடைசி வாரம் தொடங்கி திடீரென இந்தத் தேவை 500 டன் வரை உயர்ந்ததால் தட்டுப்பாடு ஏற்பட்டது. முதல்வர் இதுகுறித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன், மற்ற மாநிலங்களுடன் பேசி ஆக்சிஜன் பெறுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டதால், தற்போது நாள் ஒன்றுக்கு தமிழகத்தில் 650 மெட்ரிக் டன் ஆக்சிஜன் இருப்பில் இருக்கும் அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பயன்பாட்டினை கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவ வல்லுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் ஆக்சிஜன் தட்டுப்பாடு நீங்கி நிலைமை சீராகி விட்டது.
 
தனியார் மருத்துவமனைகளில் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நோயாளிகளை அனுமதிக்க வேண்டும் என்று உரிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் இரவுப் பகலாக உழைத்து கரோனாத் தொற்றில் இருந்து மக்களை காத்து வருகின்றனர். ஆனால் ஒரு சில தனியார் மருத்துவமனைகள் பெருந்தொற்று காலத்தில் மனசாட்சியின்றி பணம் சம்பாதிக்கும் நோக்கில் நடந்து கொள்கிறார்கள். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, மீண்டும் நோயாளிகளிடம் பணத்தை திரும்ப வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
 
தமிழகத்தில் இதுவரை 1.01 கோடி தடுப்பூசிகள் நமக்கு வந்துள்ளது. இதில் 95.91 லட்சம் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. 1.50 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.இம்மாதத்திற்கு தமிழகத்தில் 42 லட்சம் தடுப்பூசிகளை ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதை விரைவாக வழங்க கோரிக்கை விடுத்துள்ளோம்.6-ந்தேதிக்கு பிறகு தடுப்பூசிகள் வரும் என எதிர்பார்க்கிறோம். பொதுமக்கள் எந்த தடுப்பூசியாக இருந்தாலும் அதை எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
தமிழகத்தில் கருப்பு பூஞ்சை நோயால் 840 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 30 ஆயிரம் மருந்து குப்பிகளை கருப்பூ பூஞ்சை நோய்க்கு அளிக்குமாறு மத்திய அரசிடம் முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். கரோனா தொற்று இல்லாதவர்களுக்கும் கருப்பூ பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருந்தால் எந்த வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்துள்ளார்.
 
அப்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் எஸ்.கார்மேகம், அரசு மருத்துவக்கல்லூரி முதன்மையர் வள்ளி சத்தியமூர்த்தி ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com