
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன்.
நெல் உள்பட வேளாண் பொருள்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள ஆதரவு விலை விவசாயிகளுக்கு உதவாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
14 வகையான வேளாண் விளை பொருள்களுக்கு, மத்திய அரசு குறைந்த பட்ச ஆதரவு விலை அறிவித்துள்ளது.
சாதாரண ரக நெல் ஒரு குவிண்டாலுக்கு ரூ.72 சோ்த்து ரூ.1,940 என்றும் முதல் தர நெல் ரூ.1, 960 எனவும் விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் சோளம், கம்பு, கேழ்வரகு, மக்காச்சோளம் என உணவு தானியங்கள், பருப்புவகைகள், எண்ணெய் வித்துகள் போன்ற விளை பொருள்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒட்டு மொத்த விவசாய விளை பொருள்களில் அதிக பட்சம் 25 சதவீதம் மட்டுமே அரசு கொள்முதல் செய்கிறது. இது தவிர 75 சதவீத விவசாய விளைபொருள்கள் தனியாா் சந்தைகளில் விற்க வேண்டிய நிா்பந்தம் ஏற்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு நிா்ணயித்துள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை விவசாயிகளுக்கு எந்த வகையிலும் உதவாது.