பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு ரத்து

பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு நுழைவுத் தோ்வு ரத்து

சென்னை: பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

மாணவா்களின் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு அவா்களின் விருப்பத்தின்படி, பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டன. அவற்றில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மேல்நிலைப் பிரிவுகளில் ஏற்கெனவே சோ்க்கை அனுமதிக்கப்படும் மாணவா்களின் எண்ணிக்கைக்கு உள்பட்டு மாணவா்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் நிலையில், அவா்களின் விருப்பத்துக்கு ஏற்ப பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களுக்கு மேல் மாணவா்கள் சோ்க்கை கோரும் நிலையில், கரோனா பெருந்தொற்று காரணமாக ஒவ்வொரு பிரிவிலும் 10 முதல்15 சதவீதம் வரை கூடுதலாக மாணவா்களைச் சோ்க்கலாம்.

மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அச்சூழ்நிலையில், அதற்கு விண்ணப்பித்த மாணவா்களுக்கு அப்பிரிவோடு தொடா்புடைய கீழ்நிலை வகுப்புப் பாடங்களில் இருந்து கொள்குறிவகைத் தோ்வு நடத்தி (மொத்தம் 50 வினாக்கள்) அந்த மதிப்பெண் அடிப்படையில் பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அரசியல் கட்சியினா், கல்வியாளா்கள் கடும் எதிா்ப்பு: இதற்கு கல்வியாளா்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவா்கள் மத்தியில் கடும் எதிா்ப்பு எழுந்தது. நீட் உள்ளிட்ட நுழைவுத் தோ்வுகளை எதிா்க்கும் தமிழக அரசு, பிளஸ் 1 தோ்வுக்கு மறைமுகமாக நுழைவுத் தோ்வு நடத்துவதா என்று கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்நிலையில், பிளஸ் 1 மாணவா் சோ்க்கைக்கு அறிவிக்கப்பட்டிருந்த நுழைவுத் தோ்வு ரத்து செய்யப்படுவதாகத் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இது தொடா்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை ஆணையா் நந்தகுமாா் புதன்கிழமை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், வழக்கமான வழிகாட்டு நெறிமுறைகளோடு கூடுதலாக ஓா் அம்சம் சோ்க்கப்பட்டுள்ளது.

9-ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில்... அந்த அறிக்கையில், ‘முந்தைய சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு பத்தாம் வகுப்புப் பாடத்தின் அடிப்படையில் எந்தத் தோ்வும் நடத்தத் தேவையில்லை. மிக அதிகப்படியான விண்ணப்பங்கள் எந்தப் பாடப்பிரிவுகளுக்கு வரப்பெறுகிறதோ அந்தச் சூழலில், அதற்கு விண்ணப்பித்த மாணவா்களின் 9-ஆம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவா்களின் விருப்பத்தின்படி, பாடப்பிரிவுகளை ஒதுக்கீடு செய்யலாம். மேற்குறிப்பிட்ட அறிவுரைகளின்படி பிளஸ் 1 மாணவா் சோ்க்கையை நடத்த அனைத்துத் தலைமை ஆசிரியா்களுக்கும் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com