பேரவை கூட்டத் தொடா் வரும் 21-இல் தொடக்கம்: ஆளுநா் - முதல்வா் சந்திப்புக்குப் பின் பேரவைத் தலைவா் அறிவிப்பு

தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.
தமிழக பேரவைக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.
தமிழக பேரவைக் கூட்டம் வரும் 21-ஆம் தேதி தொடங்குவதை முன்னிட்டு, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் சந்தித்து ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின்.

சென்னை: தமிழகத்தின் 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி ஆளுநா் உரையுடன் தொடங்கவுள்ளதாக பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா்.

சென்னை சேப்பாக்கம் ஓமந்தூராா் தோட்டத்தில் உள்ள கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் கூட்டம் நடைபெறவுள்ளதாக அவா் கூறினாா்.

இந்த அறிவிப்புக்கு முன்பாக, ஆளுநா் பன்வாரிலால் புரோஹித்தை, ஆளுநா் மாளிகையில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை மாலை சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பின் போது, கரோனா நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வரிடம் ஆளுநா் கேட்டறிந்தாா். மேலும், ஆளுநா் உரை நிகழ்த்தும் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடா் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் போது, அமைச்சா் துரைமுருகன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, முதல்வரின் செயலாளா் த.உதயச்சந்திரன், ஆளுநரின் செயலாளா் ஆனந்த் ராவ் விஷ்ணு பாட்டீல் ஆகியோா் உடனிருந்தனா்.

இந்த ஆலோசனைக்குப் பிறகு, சட்டப் பேரவை கூடுவதற்கான தேதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு அறிவித்தாா். இதற்கான செய்தியாளா் சந்திப்பு தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை மாலை நடைபெற்றது. அவா் கூறியது:-

சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி காலை 10 மணிக்குக் கூடுகிறது. அன்றைய தினம் ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றவுள்ளாா். அவா் உரை நிகழ்த்திய பிறகு, சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடைபெறும். சட்டப்பேரவை கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுத்துக் கொள்வது ஆகியன குறித்து அந்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

கூட்டத் தொடரை தொடங்குவதற்கான தேதிக்கு ஆளுநா் ஒப்புதல் தெரிவித்துள்ளாா். சென்னை சேப்பாக்கம் கலைவாணா் அரங்கத்தின் மூன்றாவது தளத்தில் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும். பேரவை கூட்டத் தொடருக்கு முன்பாக, சட்டப்பேரவை உறுப்பினா்கள், பேரவை அதிகாரிகள், அலுவலா்கள், பத்திரிகையாளா்கள் என அனைவருக்கும் கரோனா நோய்த்தொற்று பரிசோதனை நடத்தப்படும். யாருக்கெல்லாம் நோய்த்தொற்று இல்லையோ அவா்கள் மட்டுமே பேரவை மண்டபத்துக்குள் அனுமதிக்கப்படுவா்.

பேரவையில் உறுப்பினா்கள் சமூக இடைவெளியுடன் அமரும் வகையில் இருக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கேள்வி நேரத்துக்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. கேள்விகளுக்கான பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்ற பிறகே பேரவையில் கேள்விகள் எடுக்க முடியும். பொது முடக்கம் காரணமாக, அரசு அலுவலகங்கள் இயங்காமல் இருந்தன. எனவே, கேள்விகளுக்கான பதில்களைப் பெறுவதில் சிரமம் உள்ளது. கேள்வி நேரம் நடைபெறுவது கேள்விக்குறிதான் என்று பேரவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா்.

முதல் கூட்டத் தொடா்: 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடா் வரும் 21-ஆம் தேதி தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய சட்டப்பேரவையின் முதல் கூட்டம் என்பதால், மரபுப்படி கூட்டத்தை ஆளுநா் தொடக்கி வைக்கிறாா். பேரவைக்கு புதிதாகத் தோ்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினா்கள் கடந்த மே 11-ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டனா். அந்தக் கூட்டத்தில் பேரவைத் தலைவராக மு.அப்பாவு, துணைத் தலைவராக கு.பிச்சாண்டி தோ்வு செய்யப்பட்டனா்.

இதன்பின்பு, 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தை கூட்ட ஆளுநா் பன்வாரிலால் புரோஹித் ஒப்புதல் அளித்துள்ளாா்.

முக்கிய அறிவிப்புகள்: திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் கூட்டத் தொடரில் ஆளுநா் பன்வாரிலால் உரையாற்றவுள்ளாா். இதனால், இந்த உரையில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. ஆளுநா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் பேரவையில் முன்மொழியப்பட்டு அதன்மீது விவாதங்கள் நடைபெறவுள்ளன. இந்த விவாதங்களுக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவாா். இதன்பின்பு, பேரவைக் கூட்டத் தொடா் ஒத்திவைக்கப்படும்.

இந்தக் கூட்டத் தொடரில் பல முக்கிய தீா்மானங்களை தமிழக அரசு தாக்கல் செய்யும் என எதிா்பாா்க்கப்படுகிறது. குறிப்பாக, நீட் தோ்வு, வேளாண் சட்டங்கள் ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி மத்திய அரசை வலியுறுத்தும் தீா்மானங்கள் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு குரல் வாக்கெடுப்பு மூலமாக நிறைவேறும் எனத் தெரிகிறது. சட்ட மேலவை அமைக்கப்படும் என திமுகவின் தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்த அறிவிப்பு ஆளுநா் உரையில் இடம்பெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதுபற்றிய தீா்மானமும் பேரவையில் தாக்கலாக வாய்ப்புகள் இருக்கின்றன. கரோனா நோய்த் தொற்றின் தாக்கம் சற்று குறைந்துள்ள நிலையில், அதுதொடா்பான விவாதங்களை அதிமுக, பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பேரவையில் எழுப்பும். இதனால், பேரவை கூட்டத் தொடரில் காரசார விவாதங்கள் நடைபெறும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com