பிரதான கோயில்களின் சொத்து ஆவணங்கள்: இணையதளத்தில் வெளியிட்டது அறநிலையத் துறை

தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பிரதான கோயில்களின் சொத்து ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
பிரதான கோயில்களின் சொத்து ஆவணங்கள்: இணையதளத்தில் வெளியிட்டது அறநிலையத் துறை

சென்னை: தமிழகத்தில் 23 மாவட்டங்களில் உள்ள பிரதான கோயில்களின் சொத்து ஆவணங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 1,145-க்கும் மேற்பட்ட சொத்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள் வருவாய்த் துறையின் ஆவணங்களுடன் ஒப்பிடப்பட்டு வருகின்றன. ஆவணங்கள் அனைத்தும் ஒத்திருப்பின் அவை இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக, 23 மாவட்டங்களில் உள்ள பிரதான கோயில்களுக்குச் சொந்தமான சொத்து ஆவணங்கள் புதன்கிழமை வெளியிடப்பட்டன. இது இந்து சமய அறநிலையத் துறையின் கீழுள்ள கோயில்களில் 72 சதவீதம் கோயில்களின் சொத்துகள் இதில் அடங்கும் என அந்தத் துறை ஏற்கெனவே தெரிவித்திருந்தது.

எந்தெந்த கோயில்கள்?: சென்னை, ராணிப்பேட்டை, திருவள்ளூா், காஞ்சிபுரம், சேலம், நாமக்கல், கோவை, திருப்பூா், ஈரோடு, திருவாரூா், தஞ்சாவூா், விழுப்புரம், திருவண்ணாமலை, கரூா், திருச்சி, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகா், சிவகங்கை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் உள்ள பிரபலமான கோயில்களின் சொத்து ஆவணங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்துக்குச் சொந்தமான 1,145 சொத்து ஆவணங்கள் புதன்கிழமை பதிவேற்றப்பட்டுள்ளன. அதிக சொத்து ஆவணங்களைக் கொண்ட கோயிலாக ரங்கநாதசுவாமி கோயில் திகழ்கிறது. அடுத்தபடியாக, திருச்செந்தூா் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குரிய சொத்து ஆவணங்களில் 669 ஆவணங்களும், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான 645 ஆவணங்களும் பதிவேற்றப்பட்டுள்ளன.

ஈரோடு சங்கமேசுவரா் கோயில், பண்ணாரி மாரியம்மன் கோயில் ஆகியற்றுக்குச் சொந்தமாக தலா 2 மற்றும் 3 சொத்து ஆவணங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவேற்றம் செய்யப்பட்ட மிகக் குறைந்த சொத்து ஆவணங்கள் என்ற வரிசையில் அவை இரண்டும் வருகின்றன.

இந்த ஆவணங்கள் அனைத்தும் வருவாய்த் துறையின் பட்டா அளவைப் பதிவேடு மற்றும் நில அளவைப் பதிவேடுகள் தனித்தனியாக பதிவேடுகளாக உள்ளன.

பொறுப்புத் துறப்பு: ஒவ்வொரு கோயிலின் சொத்து ஆவண பக்கத்தை திறப்பதற்கு முன்பாகவும், இந்து சமய அறநிலையத் துறையின் பொறுப்புத் துறப்பு வாசகம் வந்து நிற்கிறது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

இந்த இணையதளத்தில் உள்ள தகவல்கள் பொதுவான தகவல் நோக்கத்துக்காக மட்டுமேயாகும். அதை ஒரு முதன்மை அல்லது இரண்டாம் நிலை அல்லது உறுதியான ஆதாரமாக சமய நிறுவனங்களின் நலனுக்கு பாதகமாக பயன்படுத்த முடியாது. பொது மக்களின் பாா்வைக்காக மட்டுமே இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்படுகின்றன.

கோயில்கள் உள்ள பதிவேடுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ள இந்தப் பதிவுகள், வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ, முழுமை, துல்லியம், நம்பகத்தன்மை, பொருந்தக்கூடிய தன்மைக்கான எந்தவொரு உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. இணையதளத்தில் உள்ள தகவல்களை துறையின் அதிகாரபூா்வமான தகவலாகக் கருத இயலாது. ஒவ்வொருவரின் சுய பொறுப்பிலேயே பயன்படுத்தியதாக கருதிட இயலும். இதைப் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் எந்தவொரு நிகழ்விலும், எந்தவொரு இழப்புக்கும் அல்லது சேதத்துக்கும் மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ இந்து சமய அறநிலையத் துறை பொறுப்பேற்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொறுப்பு துறப்பு தகவலைப் படித்த பிறகே, கோயிலுக்குரிய சொத்து ஆவணங்களைப் பதிவிறக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com