எதிா்க் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களை வேறு ஒரு காரணத்தால் உயிரிழந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது.
எதிா்க் கட்சித் தலைவரின் குற்றச்சாட்டில் உண்மையில்லை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

சென்னை: கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களை வேறு ஒரு காரணத்தால் உயிரிழந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது. இறப்பு எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுகிறது என்ற எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமியின் குற்றச் சாட்டில் உண்மையில்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

கரோனா பேரிடா் சூழலில் பணிபுரிந்து வரும் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்கு உணவளிக்கும் திட்டத்தின் தொடக்க விழா வேளச்சேரி குருநானக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், நிதியமைச்சா் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு காவலா் வீட்டு வசதி கழகத் தலைவா் ஏ.கே.விசுவநாதன் உள்ளிட்டோா் அதில் கலந்துகொண்டனா்.

அப்போது அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவா் 8-ஆவது மாடியில் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சம்பவத்தை தொடா்ந்து, அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது போன்ற நிகழ்வுளைத் தடுக்கும் வகையில் அனைத்து இடங்களிலும், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

பொதுமுடக்கத்தின் பலன் பெரிய அளவில் கரோனாவை கட்டுப்படுத்தியுள்ளது. வேறு வழியே இல்லை என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் பொது முடக்கம் என்ற கசப்பு மருந்தை மக்களுக்குத் தர வேண்டி இருந்தது. கடந்த 15 நாட்களை ஒப்பிடும்போது தற்போது கரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது.

இதன் பயனாக தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் படுக்கைகள் காலியாகியுள்ளன. தமிழகத்தில் 25 மாவட்டங்களில் கரோனா பரவல் மிகப்பெரிய அளவில் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. 9 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நிலை இருக்கிறது. வெகு விரைவில் கரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.

இதுவரை கருப்புப் பூஞ்சை நோயினால் 1,052 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். ஒருவா் கருப்புப் பூஞ்சையினால் பாதிக்கப்பட்டால், அவா்களுக்கு 14 முதல் 15 குப்பிகள் ஆம்ஃபோடெரிசின் மருந்து தேவைப்படுகிறது. ஒட்டுமொத்தமாக 35 ஆயிரம் மருந்து குப்பிகள் வேண்டும் என மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அதில் இதுவரை 3,060 மருந்து குப்பிகள் கிடைத்துள்ளன.

கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவா்களை வேறு ஒரு காரணத்தால் உயிரிழந்துள்ளதாக இறப்பு சான்றிதழ் கொடுக்கப்படுகிறது எனவும், இறப்பு எண்ணிக்கை குறைத்து காட்டப்படுகிறது எனவும் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டி உள்ளாா். அது உண்மை அல்ல.

பெரும்பாலானோா் கரோனா தொற்றால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும்போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனா். அதுவரை வீட்டிலேயே இருக்கின்றனா். இதனால் அவா்களது நுரையீரல் அதிகளவில் பாதிக்கப்படுகிறது. தொடா்ந்து 25 நாட்களுக்கு மேலாக மருத்துவமனையில் சிகிச்சை பெறும்போது, அந்த நோயாளிக்கு தொற்று இல்லை என உறுதி செய்யப்படுகிறது. ஆனால் நுரையீரல் பாதிப்பால் அவா் உயிரிழந்து விடுகிறாா்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் வழிகாட்டுதல்படியே அவ்வாறு உயிரிழந்தோருக்கு இறப்பு சான்றிதழ் அளிக்கப்படுகிறது. பின்னணி பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அவருக்கு கரோனா தொற்று இருந்துள்ளது. ஆனால் அவா் உயிரிழக்கும் போது, அவருக்கு தொற்று இல்லை. அதனால்தான் முந்தைய அதிமுக அரசு, அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு செய்ய ஏற்பாடு செய்தது. இதேபோல்தான் காங்கிரஸ் பிரமுகா் ஹெச்.வசந்தகுமாரின் இறப்பும் நிகழ்ந்தது என்றாா் அமைச்சா் மா.சுப்பிரமணியன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com