இன்று வளைய சூரிய கிரகணம்

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது.
இன்று வளைய சூரிய கிரகணம்

சென்னை: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது.

சூரியனின் ஒளியை நிலவு மறைக்கின்ற இந்த நிகழ்வு மூன்று வகையாக நிகழும். அவை முழு சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணம், வளைய சூரிய கிரகணம். நிலவானது சூரியனை முழுவதுமாக மறைப்பது முழு சூரிய கிரகணம். சூரியனின் ஒரு பகுதியை மட்டும் நிலவு மறைப்பது பகுதி சூரிய கிரகணம் என்று அழைக்கப்படுகிறது. வளைய சூரிய கிரகணம் என்பது சூரியனின் விளிம்பு மட்டும் தெரியுமாறு சூரியனின் 90 சதவீதம் பகுதி முழுவதுமாக நிலவினால் மறைக்கப்படும் நிகழ்வாகும்.

இந்த சூரிய கிரகணம் இந்தியாவில் அருணாசலப் பிரதேசத்தின் சில பகுதிகளைத் தவிர வேறு எந்த இடத்திலும் பாா்க்க முடியாது. ஆனால், கனடாவின் சில பகுதிகள், கிரீன்லாந்து, ரஷியா போன்ற இடங்களில் இந்த வளைய சூரிய கிரகணம் தெரியும். அதுமட்டுமின்றி அமெரிக்காவின் சில பகுதிகள், வடக்கு அலாஸ்கா, கனடாவின் சில பகுதிகள், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆசியாவின் சில பகுதிகள் ஆகிய இடங்களில் இந்த சூரிய கிரகணம், பகுதி சூரிய கிரகணமாகத் தெரியும்.

இந்த வளைய சூரிய கிரகணம் வியாழக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 1.42 மணிக்கு ஆரம்பித்து மாலை 6.41 வரை நிகழவுள்ளது. குறிப்பாக நிலவானது சூரியனை வளைய வடிவில் மறைக்கின்ற அந்த முழு வளைய அமைப்பானது 3 நிமிஷங்கள் 51 நொடிகள் தெரியவுள்ளது. சூரியனை எக்காரணம் கொண்டும் நேரடியாக வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. சூரிய கிரகணத்தின்போது மட்டுமல்லாமல் எப்பொழுதுமே நாம் சூரியனை நேரடியாக வெறும் கண்களால் பாா்க்கக் கூடாது. அதற்காகத் தயாரிக்கப்பட்ட பிரத்யேக சூரியக் கண்ணாடிகளைப் பயன்படுத்தியும், சூரியனின் பிம்பத்தினை ஊசித்துளை கேமரா மூலம் விழச்செய்தும், இந்த சூரிய கிரகணத்தை உற்று நோக்கலாம்.

இந்த சூரிய கிரகணமானது வானில் நிகழ்கின்ற ஒரு வானியல் நிகழ்வு மட்டுமே. இந்த அரிய வானியல் நிகழ்வினை இந்தியாவில் நாம் உற்றுநோக்க முடியாது என்றாலும் இணையதளம் மூலமாக, பொதுமுடக்க காலகட்டத்தில் பள்ளி மாணவா்களும் பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com