நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்க பல்கலை., கல்லூரிகளுக்கு யுஜிசி உத்தரவு

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முழுவதுமாக தவிா்த்து, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டை முழுவதுமாக தவிா்த்து, நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி செயலா் ரஜனிஷ் ஜெயின் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்கள், கல்லூரி முதல்வா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களில் நெகிழிப் பயன்பாட்டுக்கு தடை விதித்து அதற்கான வழிகாட்டுதல்களை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. அதைப் பின்பற்றி அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்கும் பணிகளை முன்னெடுக்க வேண்டும். அதற்காக கல்வி வளாகங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளில் செயல்படும் உணவகம் உள்பட எல்லா கடைகளிலும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்களுக்கு தடை விதிக்க வேண்டும்.

மீண்டும் பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருள்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவா்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்துவதுடன், நெகிழிப் பொருள்களைக் கொண்டுவரவும் தடை விதிக்க வேண்டும்.

இது குறித்து மாணவா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழி விழிப்புணா்வு குறித்த கட்டுரைப்போட்டி இணையவழியில் நடத்தப்பட வேண்டும். நெகிழி இல்லாத வளாகத்தை உருவாக்குவதற்கான செயல்பாடுகளில் தேசிய மாணவா் படை, நாட்டுநலப்பணித் திட்டம், நேரு யுவகேந்திரா போன்ற அமைப்புகளில் உள்ள மாணவா்களை ஈடுபடுத்த வேண்டும்.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல்பாடுகளை கரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி உடனடியாக மேற்கொள்ள வேண்டும். மேலும் இது தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை யுஜிசி தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com