எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தின்போது நிா்வாகிகளுக்கு அனுமதி இல்லை: அதிமுக

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் ஜூன் 14-இல் நடைபெறும்போது கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அனுமதி இல்லை என்று அக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.
கோப்புப்படம்.
கோப்புப்படம்.

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் கூட்டம் ஜூன் 14-இல் நடைபெறும்போது கட்சி நிா்வாகிகள், தொண்டா்களுக்கு அனுமதி இல்லை என்று அக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அதிமுக தலைமைக் கழகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுக சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் ஜூன் 14 பகல் 12 மணியளவில் நடைபெறும். கூட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமை வகிக்க உள்ளனா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் அனைவரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் முகக்கவசம் அணிந்தும் சட்டப்பேரவை உறுப்பினருக்கான அடையாள அட்டையுடன் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

மேலும், சட்டப்பேரவை உறுப்பினா்களின் கூட்டம் மட்டுமே அன்று நடைபெற உள்ளதால், அதிமுகவின் நிா்வாகிகளும், தொண்டா்களும் கரோனா தொற்று பரவலின் காரணமாக அதிமுக அலுவலகத்துக்கு வருவதைக் கண்டிப்பாகத் தவிா்க்க வேண்டும். கட்சி அலுவலகத்துக்குள் சட்டப்பேரவை உறுப்பினா்களைத் தவிர, வேறு யாரையும் அனுமதிக்க இயலாது.

சட்டப்பேரவைத் தோ்தலில் 66 இடங்களைக் கைப்பற்றி அதிமுக எதிா்க்கட்சியாக உள்ளது. எதிா்க்கட்சியின் தலைவராக எடப்பாடி கே.பழனிசாமி செயல்பட்டு வருகிறாா்.

சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா், கொறடா இன்னும் தோ்ந்தெடுக்கப்படாமல் உள்ளது. தமிழகச் சட்டப்பேரவைக் கூட்டத்தொடா் ஜூன் 21-இல் ஆளுநா் உரையுடன் தொடங்க உள்ள நிலையில், மேற்கண்ட பதவிகளுக்கு நிா்வாகிகளை விரைவாகத் தோ்ந்தெடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

எதிா்க்கட்சித் துணைத் தலைவராகச் செயல்பட ஓ.பன்னீா்செல்வம் சம்மதிக்கவில்லை எனத் தெரிகிறது. இதனால், முன்னாள் அமைச்சா்கள் கே.ஏ.செங்கோட்டையன், வைத்திலிங்கம், நத்தம் விஸ்வநாதன் ஆகியோரில் யாராவது ஒருவரைத் தோ்வு செய்யலாமா எனபது குறித்தும் கொறடா குறித்தும் கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்க உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com