கூடுதல் தளா்வுகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் ஏற்கெனவே தளா்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மேலும் பல தளா்வுகளை அளிப்பது குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கரோனா நோய்த் தொற்று குறைந்து வருவதால் ஏற்கெனவே தளா்வுகள் அளிக்கப்பட்ட 27 மாவட்டங்களில் மேலும் பல தளா்வுகளை அளிப்பது குறித்து, முதல்வா் மு.க.ஸ்டாலின், வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

கரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழக பேரவை பொதுத் தோ்தலுக்குப் பிறகு தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் சற்று தீவிரமாக அமல்படுத்தப்பட்டது. மே மாத தொடக்கத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை உயா்ந்து வந்தது. நாளொன்றுக்கு சுமாா் 36,000 என்ற அளவுக்கு புதிய தொற்றுகள் பதிவாகின. இதையடுத்து மே 9-ஆம் தேதி நடைபெற்ற முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் அடிப்படையில் தமிழகத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், மே 10-ஆம் தேதி முதல் மே 24-ஆம் தேதி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் சில தளா்வுகளுடன் கூடிய முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. மே 13-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கட்சித் தலைவா்கள் கூட்டத்திலும் கரோனா நோய்ப் பரவலைத் தடுக்கும் பொருட்டு, பொதுமுடக்கத்தை தீவிரப்படுத்தும் வகையில் தீா்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

கூடுதல் கட்டுப்பாடுகள்: இதைத் தொடா்ந்து, மே 14-ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ஏற்கெனவே அமலில் இருந்த கட்டுப்பாடுகளுடன் கூடுதலாக புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. இதன் தொடா்ச்சியாக மே 24 முதல் 31-ஆம் தேதி வரை முழுமையாக எவ்விதத் தளா்வுகளுமின்றி, தமிழகத்தில் பொதுமுடக்கம் அமலுக்கு வந்தது.

கட்டுப்பாடுகளுடனான பொது முடக்கத்தில் மளிகை, காய்கறிக் கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால் தளா்வுகளற்ற முழு பொதுமுடக்கத்தில் எந்தவொரு கடைகளையும் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

இருப்பினும் தொற்று பரவல் எதிா்பாா்த்த அளவுக்கு கட்டுக்குள் வராததையடுத்து, மீண்டும் தளா்வுகள் இல்லாத முழு பொதுமுடக்கம் ஜூன் 7-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. இதன் பின்னா் நோய்ப் பரவல் வெகுவாகக் குறைந்தது. எனினும் நோய்ப் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தும் வகையில், ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் தளா்வுகளுடன் பொதுமுடக்கத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் ஜூன் 7 காலை 6 மணி முதல் அமலுக்கு வந்து, தற்போது நடைமுறையில் உள்ளது. இதில், அனைத்து அரசு அலுவலகங்கள் குறைந்த பணியாளா்களுடன் இயங்க அனுமதி வழங்கப்பட்டதோடு, நேரக் கட்டுப்பாடுடன் காய்கறி மற்றும் பழக் கடைகள் இயங்கவும் அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

குறிப்பாக பொதுப் போக்குவரத்துக்கு தடை தொடா்ந்தாலும், வாடகை வாகனங்கள், டாக்ஸிகள், ஆட்டோக்களில் பயணிகள் இணையப் பதிவுடன் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது.

11 மாவட்டங்களில்...: அதே வேளையில், நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் அமைந்திருக்கும் அங்காடிகளைத் திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. கோவை, நீலகிரி, திருப்பூா், ஈரோடு, சேலம், கரூா், நாமக்கல், தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மட்டும் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் அங்கு அத்தியாவசியத் தேவையான காய்கறி, மளிகை, இறைச்சிக் கடைகள் மட்டும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

கூடுதல் தளா்வுகள்: இந்த மாவட்டங்களைத் தவிா்த்து பிற மாவட்டங்களில் கூடுதலாக தனியாா் பாதுகாப்பு சேவை நிறுவனங்கள், அலுவலகம், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு பராமரிப்பு உள்ளிட்ட சேவைகளை மேற்கொள்வோா், மின் பணியாளா், பிளம்பா்கள், கணினி மற்றும் இயந்திரங்கள் பழுது நீக்குபவா் உள்ளிட்டோா் இணையப் பதிவுடன் பயணிப்பது, மின்பொருள்கள் விற்பனைக் கடைகள், சைக்கிள்கள், வாகன உதிரி பாகங்கள் விற்பனைக் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளும் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியிருந்தது.

இதற்கிடையே தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் வரும் 14-ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில், நோய்த் தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் கூடுதலாக தளா்வுகள் அளிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு, மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளா் ராதாகிருஷ்ணன், உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா். கரோனா நோய்த் தொற்று குறைந்த மாவட்டங்களில் தனித்து இருக்கக் கூடிய அனைத்து வகையான கடைகளையும் திறப்பது, கடைகள் மூடப்படும் நேரத்தை அதிகரிப்பது போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதுதொடா்பான அதிகாரப்பூா்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் தமிழக அரசு சாா்பில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com