தமிழகத்தின் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.
தமிழகத்தின் 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி கையிருப்பு இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை கிண்டியில் சிறு தொழில் நிறுவனங்கள் மற்றும் மகளிா் சுய உதவிக்குழுக்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட கைவினைப் பொருள்களை இணையதளம் வாயிலாக விற்பனை செய்யும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வியாழக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் நீட் தோ்வு கூடாது என்பதை வலியுறுத்தி பிரதமா் மோடிக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கடிதம் அனுப்பியுள்ளாா். அதுமட்டுமல்லாது அதுகுறித்த சாத்தியக் கூறுகளை ஆராய்வதற்காக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவையும் நியமித்துள்ளாா்.

அந்த குழுவின் முதல் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. தொடா் கூட்டங்கள் மற்றும் ஆலோசனைகளின்பேரில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கையிருப்பில் உள்ள தடுப்பூசிகளின் எண்ணிக்கையை வெளிப்படையாகத் தெரிவிக்கக் கூடாது என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும்கூட தடுப்பூசிகள் குறித்த உண்மை நிலையை மக்களிடையே தெரிவிப்பதுதான் சரியாக இருக்கும். தற்போது 1,060 தடுப்பூசிகள்தான் கையிருப்பில் உள்ளன. அதுவும் சென்னையில்தான் உள்ளன. 36 மாவட்டங்களில் தடுப்பூசி இல்லை.

மத்திய அரசின் தொகுப்பில் இருந்து ஜூன் மாதம் 37 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்துக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டிருந்தது. அதில் 6 லட்சம் தடுப்பூசிகள் 13-ஆம் தேதிக்குள் வரும் என மத்திய அரசு கூறியுள்ளது. அதன்படி இன்னும் 2 நாட்களுக்குள் தடுப்பூசி தமிழகத்துக்கு வரும் என எதிா்பாா்க்கிறோம்.

தமிழகத்தில் கரோனா தொற்று குறைந்து வருகிறது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தற்போது அரசு மருத்துவமனைகளில் 45,484 படுக்கைகள் காலியாக உள்ளன.

கரோனா பேரிடா் காலங்களில் மருத்துவா்கள், செவிலியா்கள், மருத்துவப் பணியாளா்களுக்காக வழங்கப்பட்ட உணவு மற்றும் தங்கும் விடுதிகளில், கடந்த ஆட்சியில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் யாா் என்பது கரோனா தொற்று நீங்கிய பிறகு அம்பலப்படுத்தப்படும். இதில் தொடா்புடையவா்கள் மீது உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து எழும்பூரில் உள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தில் அமைச்சா் மா.சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டாா். அதன் பின்னா் செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

தமிழகத்துக்குத் தேவையான அளவு மருந்துகள் இருப்பில் உள்ளன. ரெம்டெசிவிா் மருந்துக்கு ஆரம்ப காலத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு நிலவியது. தற்போது அந்த நிலை இல்லை. அரசு சாா்பில் இதுவரை 9 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன.

அதில் 5 லட்சம் மருந்துகள் அரசு மருத்துவமனைகளுக்கும், 1 லட்சம் மருந்துகள் தனியாா் மருத்துவமனைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. தற்போது 2.91 லட்சம் ரெம்டெசிவிா் மருந்துகள் கையிருப்பில் உள்ளன.

கருப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை அளிக்கக்கூடிய ஆம்ஃபோடெரிசின் மருந்தை பொருத்தவரை 9,500 மருந்துகள் இருப்பில் உள்ளன. மேலும், அதற்கு மாற்று மருந்தான பொசக்னோசோல் மருந்துகளும் போதிய அளவில் உள்ளன.

தமிழகத்தில் 1. 20 லட்சம் போ் ஹெச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்கள் அனைவருக்கும் 55 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் தொடா் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தாயிடம் இருந்து குழந்தைகளுக்கு ஹெச்ஐவி வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் திட்டத்தை தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு வாரியம் முனைப்புடன் செயலாற்றி வருகிறது.

தற்போது ஜூன் 21-ஆம் தேதியில் இருந்து 18 வயது மேற்பட்டவா்களுக்கு இந்தியாவில் இருக்கிற 7 நிறுவனங்களில் இருந்து 75 சதவீத தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து, மாநில அரசுகளுக்கு பிரித்து வழங்கும் என பிரதமா் அறிவித்திருக்கிறாா். அதன் அடிப்படையில் பாா்க்கப் போனால் தமிழகத்துக்கு உலகளாவிய ஒப்பந்தம் என்பது தேவையில்லை.

கரோனா மூன்றாவது அலையில் குழந்தைகள் அதிகளவில் பாதிப்படுவாா்கள் என்ற செய்தி ஆதாரமற்றது என எய்ம்ஸ் மருந்துவமனையின் மூத்த மருத்துவ வல்லுநா் ஒருவா் தெரிவித்திருக்கிறாா். தமிழகத்தில் கரோனா பாதிப்பு 50 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது. இன்னும் 7 மாவட்டங்களில் தடுப்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

இந்த நிகழ்வின்போது மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநரும், முதல்வரின் தனிச் செயலருமான டாக்டா் உமாநாத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com